Published : 25 Mar 2020 06:55 PM
Last Updated : 25 Mar 2020 06:55 PM

வீட்டுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பொருட்களை வாங்கலாம்: வெளியில் சுற்றினால் வாகனம் பறிமுதல், வழக்கு: காவல் ஆணையர் எச்சரிக்கை

உங்கள் பகுதியை விட்டு வெகுதூரம் ஏன் பயணிக்கிறீர்கள்? சாலைகளில் அத்துமீறுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். வழக்குப் பதிவு செய்வோம். இது விடுமுறை காலமல்ல, சுற்றுவதற்கு என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

"தமிழகத்தைப் பொறுத்தவரையில் பொதுமக்கள் ஒழுக்கத்தோடு இருக்கிறார்கள். அரசு உத்தரவை பெரும்பாலானோர் மதித்து நடக்கிறார்கள். அதனால் பிற மாநில போலீஸார் போல சாலையில் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை நமக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன். சட்டத்திற்குப் புறம்பாகச் செய்ய வேண்டியதில்லை. மக்களுக்கு அறிவுறுத்தி விதிமுறைகளைப் பின்பற்ற வைக்க வேண்டும்.

தடையை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். அதுபற்றி பிறகு தெரிவிக்கிறோம். வெளிநாடுகளிலிருந்து வந்து வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வெளியே சென்ற 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம்.

அரசு அறிவித்த கடைகள் மட்டுமே திறக்க வேண்டும். அத்தியாவசியப் பணிக்காக வாகனங்களில் செல்பவர்கள் அடையாள அட்டைகளைக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். யாருக்காகவது காய்ச்சல் அறிகுறி என்று தெரிந்தால் மருத்துவர்களிடம் தெரிவிக்க வேண்டும். உதவி எண்களில் கூறலாம். அதனை யாரும் மறைக்க வேண்டாம். அருகில் வசிப்பவர்களுக்கு அதுபற்றித் தெரிந்தால் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். கண்டிப்பாகத் தெரிவியுங்கள்.

சென்னை பெருநகர காவல் எல்லைகளில் 10 சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளோம். வெளியே இருந்து யாரும் உள்ளே வர முடியாது. உள்ளே இருந்து யாரும் வெளியே செல்ல முடியாது. அதற்குத் தடை விதித்துள்ளோம். மாநகராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம். 30 பறக்கும் படை குழுக்களை அமைத்துள்ளோம். இதில் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை, சுகாதாரத்துறையினர் இருப்பார்கள்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதன் முக்கியத்துவத்தை தெரிந்துகொண்டு பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு இருந்தபோதும் நிறைய பேர் இன்று பைக்கில் சாலைகளில் செல்வதைப் பார்க்க முடிகிறது. அவர்களை போலீஸார் மடக்கிக் கேட்டால் பொருட்கள் வாங்கப்போகிறோம், மருந்து வாங்கப்போகிறோம் என்று கூறுகின்றனர்.

சூப்பர் மார்க்கெட்களில் பொருட்களை ஊழியர்களே எடுத்துக் கொடுக்க அறிவுறுத்துவோம். வீட்டில் கண்காணிப்பில் இருப்பவர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டும். கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் சமூக விலகலைப் பின்பற்றுவது இல்லை. ஒரு மீட்டர் தூரமாவது விலகி இருக்க வேண்டும். இதுகுறித்து காவல்துறையினர் கூறும் அறிவுறுத்தலைக் கேளுங்கள்.

இது விடுமுறை காலமல்ல. தற்போதுள்ள நிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வந்தால் வழக்குப்பதிவு செய்து பாஸ்போர்ட்டை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அனைத்துப் பகுதிகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் திறந்து இருக்கும்போது ஏன் அங்கு வாங்காமல் வெளியில் சுற்றுகிறீர்கள், விதிமுறைகளை மீறுகிறீர்கள்? பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். ஒரு சிலர் தடை உத்தரவை மீறுவதால் அனைவருக்கும் பிரச்சினையாக இருக்கிறது. பொதுமக்கள் தேவையில்லாமல் பைக்கில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

சாலைகளில் அத்துமீறி பைக்கில் செல்லும் இளைஞர்களே! இது விடுமுறைக் காலம் இல்லை. எல்லோரும் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துமீறி வாகனங்களில் சென்றால் செல்பவர்களின் வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்யும். முதலில் எச்சரிக்கை விடுத்துள்ளோம். அதை மதிக்காமல் நடந்தால் அடுத்தகட்டமாக வாகனங்களைப் பறிமுதல் செய்வோம்".

இவ்வாறு ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x