

ஆந்திர மாநிலத்தில் 20 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 26-ம் தேதியும் மற்றும் போளூரில் செப்டம்பர் 8-ம் தேதியும் நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித்தொழிலாளிகள் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி, அவர்களை ஆந்திர வனத்துறையின் சிறப்பு காவல்படையினர் திருப்பதி அருகே கடந்த ஏப்ரல் 7-ம் தேதியன்று சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜுலை 15 மற்றும் ஆகஸ்ட் 11-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டங்களில் மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்டக் கட்சிகள் பங்கேற்றன.
அதன்பேரில், 20 தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழக அரசு தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வரும் 26-ம் தேதியும், போளூரில் வரும் செப்டம்பர் 8-ம் தேதியும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்களில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.