

அரசு அனுமதித்தால், வீடாக இருந்த கட்டிடத்தை மருத்துவ மையமாக்கி மக்களுக்கு உதவத் தயார் என்று கமல் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், வெளியே வரும் பொதுமக்களைக் காவல்துறையினர் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தி வருகிறார்கள்.
இதனிடையே கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க தன் வீடாக இருந்த கட்டிடத்தை அளிக்கத் தயார் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்குப் பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களைக் கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதைச் செய்யத் தயாராகக் காத்திருக்கிறேன். உங்கள் நான்".
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.