தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று: எண்ணிக்கை 23 ஆனது

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று: எண்ணிக்கை 23 ஆனது
Updated on
1 min read

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவின் கோரத் தாண்டவத்தால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 550 பேரைக் கடந்துள்ள கரோனா பாதிப்பில், இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். இதுவரை கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் உயிரிழப்பு இருந்த நிலையில் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், கை குலுக்கக் கூடாது, கிருமி நாசினிகளை உபயோகிக்க வேண்டும், 15 நாட்கள் சமுதாயத் தனிமையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் உலகம் முழுவதும் வைக்கப்பட்டது.

3-ம் நிலையான சமுதாயப் பரவல் நிலை இந்தியாவுக்குள் வந்துவிடக்கூடாது என மருத்துவர்கள், அரசாங்கங்கள் போராடுகின்றனர். பிரதமர் நேற்றிரவு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.

இரண்டாம் நிலையில் இருக்கும் இந்தியா, தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் மூன்றாம் நிலையான சமுதாயப் பரவலைத் தடுக்க முடியும் என்பதால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட 18 பேரில் 16 பேர் வெளியூரிலிருந்து வந்தவர், ஒருவர் டெல்லியிலிருந்து வந்தவர்.

இன்று அதிகாலையில் மதுரை நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் தமிழகத்தில் முதல் கரோனா உயிரிழப்பு ஏற்பட்டது. தற்போது 18 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழக்க, ஒருவர் சிகிச்சை முடிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவிலிருந்து இஸ்லாமிய மத போதகர்கள் சுமார் 11 பேர் சேலம் வந்துள்ளனர். அவர்களுடன் வந்த வழிகாட்டி உள்ளிட்டோரைத் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். அவர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன.

இந்நிலையில் அதில் இந்தோனேசிய நபர்கள் 4 பேருக்கும், உடன் இருந்த கைடு (வழிகட்டி) ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சேலத்தில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்:

“5 புதிய நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 இந்தோனேசியர்கள், மற்றும் அவர்களுடன் பயணித்த சுற்றுலா வழிகாட்டிக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 22 முதல் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்”.


இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in