

கைத்தறி, கைத்திறன் மற்றும் கதர் துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்துவைத்த முதல்வர் ஜெயலலிதா, மண்பாண்ட தொழிலாளர் குடும்பங்களுக்கான நிதியுதவித் திட்டத்தையும் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தின்கீழ் பதிவு செய்துள்ள நெசவாளர்கள், நெசவுக்கு முந்தைய பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள ஏதுவாக நாமக்கல் மாவட்டம் மரவப்பாளைத்தில் ரூ.29.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பரமத்திவேலூர் குழும பொது வசதி மையக் கட்டிடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
மேலும், ஈரோடு, கடலூர், அரியலூர், மதுரை, கோவை, தஞ்சை, கரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, காஞ்சிபுரம், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 21 பொது வசதி மைய கட்டிடங்களையும் முதல்வர் திறந்துவைத்தார்.
சேலம் மாநகர் அஸ்தம்பட்டியில் 9,049 சதுர அடி பரப்பில் ரூ.1.65 கோடியில் கட்டப்பட்ட பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர் அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள தமிழ்நாடு பட்டு வளர்ச்சி பயிற்சி நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் 12,667 சதுர அடியில் கட்டப்பட்ட பயிற்சிக் கூடம் மற்றும் தங்கும் விடுதி ஆகியவற்றையும் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
பராமரிப்பு உதவித்தொகை
மழைக்காலங்களில் மண்பாண்டங்கள் செய்வதில் உள்ள சிரமங்களை கருத்தில்கொண்டு, மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதார நிதியுதவியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.4 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படும் என 2014-15 நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நீலகிரி மாவட்டம் நீங்கலாக 31 மாவட்டங்களில் 12,236 மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.4 கோடியே 89 லட்சத்து 44 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்'' என்று கூறப்பட்டுள்ளது.