

கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு அமலாகியுள்ள சூழலில், ஆண்டு இறுதித் தேர்வை நடத்த முடியாத நிலை உள்ளதால், புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயத் தேர்ச்சி செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு இன்று (மார்ச் 25) வெளியிட்ட உத்தரவில், "கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். அதனால் ஆண்டு இறுதித்தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அதனால் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு இறுதித்தேர்வு புதுச்சேரியில் ரத்து செய்யப்படுகிறது. 1 முதல் 9 வரை படித்த அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.