

கரோனாவை விரட்டும் சக்தி பெண்கள்தான் எனவும், குடும்பத் தலைவரும், குழந்தைகளும் வீட்டு வாசலைவிட்டு வெளியே கால்களை எடுத்து வைக்க குடும்பத் தலைவிகள் அனுமதிக்கக் கூடாது எனவும், பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 25) தன் ட்விட்டர் பக்கத்தில், "ஆக்கும் சக்தியும், காக்கும் சக்தியும் பெண்கள்தான். கரோனா பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு ஆணையை வீட்டு அளவில் செயல்படுத்தும் கடமையும், பொறுப்பும் இல்லத்தரசிகளுக்கு உண்டு. அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி வீட்டையும், நாட்டையும் காக்க வேண்டும்!
குடும்பத் தலைவரும், குழந்தைகளும் வீட்டு வாசலை விட்டு வெளியே கால்களை எடுத்துவைக்க குடும்பத் தலைவிகள் அனுமதிக்கக் கூடாது. வெளியில் சென்றால் 'கரோனா நோயைக் கொள்முதல் செய்யப் போகிறீர்களா?' என்று எச்சரித்து தடுத்து நிறுத்த வேண்டும். கரோனாவை விரட்டும் சக்தி பெண்கள்தான்!
பொதுவெளியில் ஊரடங்கு ஆணையை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது காவல் துறையினரால் மட்டுமே சாத்தியமாகும். அவர்களின் பணி மிகவும் சிறப்பானது. வீடுகளை விட்டு எவரும் வெளியில் வராமலிருப்பதை உறுதி செய்யும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; மக்களைக் காக்க வேண்டும்" என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.