

புதுச்சேரி எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் புதுச்சேரி - தமிழக எல்லைகள் வெறிச்சோடியுள்ளன. தடையை மீறி உலா வந்தோர், கடைகளைத் திறந்தோர் என 47 பேர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.
மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவால் தமிழகம் - புதுச்சேரி மாநில எல்லைகள் கணபதி செட்டிகுளத்தில் நள்ளிரவு முதல் மூடப்பட்டதால் இரு மாநில முக்கியச் சாலையான கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. கிழக்கு கடற்கரைச் சாலையில் அனுமந்தை என்ற இடத்தில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் ஊழியர்களின் வாகனங்கள் எதுவும் இல்லாததால் காலியாக இருந்தது.
தமிழக எல்லையான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் கீழ்புத்துப்பட்டு, அனுமந்தை ஆகிய இடங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். மேலும், மருத்துவமனை, அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக செல்லும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
இதேபோல், புதுச்சேரி மாநில எல்லையான கணபதி செட்டிகுளம் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டது. இதனால், தமிழகம் - புதுவை இடையே வாகனங்கள் இயங்கவில்லை. இருந்தபோதிலும் இரண்டு பேர் மூன்று பேருக்கும் மேல் சாலையில் நடந்து சென்றாலோ அல்லது நின்று கொண்டிருந்தாலும் போலீஸார் விரட்டி அடித்து வருகிறார்கள்.
எல்லைப் பகுதிகளில் தமிழகம், புதுச்சேரி போலீஸார் இணைந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர். புதுச்சேரியிலிருந்து கடலூர், விழுப்புரம், திண்டிவனம், கிழக்கு கடற்கரைச் சாலை அனைத்திலும் பாதுகாப்புப் பணிகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். விதிமீறுவோர் விரட்டப்படுகின்றனர்.
இச்சூழலில் புதுச்சேரியில் இன்று (மார்ச் 25) தடையை மீறி உலா வந்ததாக அனைத்துக் காவல் நிலையங்களிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 47 பேர் மீது தடை உத்தரவை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 காய்கறிக் கடைகள் ஒரு இறைச்சிக் கடை மற்றும் ஒரு தனியார் கம்பெனி மீதும் தடை உத்தரவை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.