

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின்போது கைது செய்யப்பட்டவர்களையும் விடுவிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட 370-வது பிரிவை நீக்கி, சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இந்த நடவடிக்கை எடுக்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது காஷ்மீர் நிர்வாகம். அதன்பின் இவர்கள் 3 பேரும், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது.
ஏறக்குறைய 7 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை கடந்த 13-ம் தேதி காஷ்மீர் நிர்வாகம் விடுவித்து உத்தரவிட்டது.
ஆனால், பரூக் அப்துல்லாவின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா விடுவிப்பு குறித்து எந்த அறிவிப்பையும் காஷ்மீர் நிர்வாகம் அறிவிக்கவில்லை. இந்நிலையில், உமர் அப்துல்லா மீது விதிக்கப்பட்டிருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைtஹ் திரும்பப் பெறுவதாக அறிவித்த காஷ்மீர் நிர்வாகம், அவரை விடுவித்தது.
ஆனால், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியை இன்னும் விடுவிக்கப்படவில்லை
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 25) தன் ட்விட்டர் பக்கத்தில், "உமர் அப்துல்லாவை விடுவித்து மெகபூபா முப்தி உள்ளிட்ட பிற காஷ்மீர் தலைவர்களை விடுவிப்பதில்லை என்ற முடிவானது மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒருங்கே தரும் முடிவாகும்.
கரோனா வைரஸைத் தடுக்க நாம் ஆயத்தமாகுதல் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு பரோல் வழங்கி வரும் நிலையில், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின்போது கைது செய்யப்பட்டவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.