

உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி மதுரையில் ‘கரோனா’ அறிகுறி சிகிச்சைக்கு தனிமைப்படுத்தப்பட்ட தனி மருத்துவ கட்டிடங்களில் சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
நெருக்கமான கட்டிடங்களில் இந்த சிகிச்சை வார்டுகள் அமைத்துள்ளதால் மருத்துவர்கள், பணியாளர்கள் அச்சத்துடன் பணிபுரிகின்றனர். மேலும், என்.95 முகக்கவசங்களுக்கு நிலவும் தட்டுப்பாடும் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ‘கரோனா’ பாதிப்பு அறிகுறி நோயாளிகள் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துமனை பழைய கட்டிடத்தில் உள்ள வார்டு எண் 120, பழைய டெங்கு வார்டு, பல்நோக்கு சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அமைந்துள்ள பிரத்யேக வார்டு மற்றும் தற்போது மருத்துவக்கல்லூரி வளாகத்தில் புதிதாகக் கட்டப்படும் முதுகலை மருத்துவ மாணவர்களின் விடுதி ஆகிய நான்கு இடங்களை மருத்துவமனை நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
மதுரையில் முதல் முதலாக ஒருநபருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சிலர் அறிகுறிடன் சிகிச்சை பெறுகின்றனர்.
ஆய்வு முடிவு வரும் வரை எங்கே இருப்பார்கள்?
கரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்று அச்சம் நிலவி வரும் நிலையில், வைரஸ் அறிகுறிகளோடு அடையாளப்படுத்தப்படும் நபரை தொண்டை பரிசோதனை, இரத்தப் பரிசோதனைகள் உள்ளிட்ட முடிவுக்கு காத்திருக்கும் சில மணி நேரங்களில் கரோனா பிரத்யேக வார்டில் சிகிச்சை அளிக்கப்படுவார்களா அல்லது வேறு வார்டில் பிரத்யேகமாக சிகிச்சை அளிப்பார்களா என்று உறுதியான பின்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
பரிசோதித்து உறுதிப்படுத்துவதற்குள் பிறருக்கு கரோனா பரவக்கூடிய அபாயமும் உள்ளது. அதனால் ‘கரோனோ’ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனிமைப்படுத்தப்பட்ட கரோனா பிரத்யேக கட்டிடம் கொண்ட வார்டுகள் அமைக்கப்படவேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
இந்த நடைமுறையை கடைபிடிக்காததாலேயே இத்தாலியில் கரோனா வைரஸ் மிக அதிகளவில் பாதிக்கப்பட்ட உயிரிழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
என்-95 முகக்கவசத்துக்கு தட்டபாடு:
மருத்துவமனையில் ‘கரோனா’ தொற்று பரவலைத் தடுக்கும் என்-95 முகக்கவசம் தட்டபாடு ஏற்பட்டுள்ளது. இப்போதைக்கு மருத்துவர்களுக்கு மட்டுமே இந்த முகக்கவசம் வழங்கப்படுகிறது. செவிலியர்கள் மற்றும் மற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. வெளியில் இந்த முகக்கவசங்கள் முற்றிலும் விற்பனையில் இல்லை. சாதாரண முகக்கவசங்களே உள்ளது. அதைப் பயன்படுத்தினால் எந்த பயனும் இல்லை. தனியார்
மற்றும் பிற அரசு நிறுவன கட்டிடத்திற்குள் வருபவர்களுக்கு சேனிடைசர் பயன்பாட்டிற்குப் பின்னரே பாதுகாப்பாக உள்ளே அனுமதிக்கின்றனர்.
ஆனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அத்தகைய எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்ற் ஆதங்கமும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
இதுகுறித்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தன் 7 வயது குழந்தையுடன் வந்திருந்த வெரோணிக்கா மேரி கூறுகையில், ‘‘என் குழந்தையின் சகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். போவதற்கு முன்பு பல கடைகளில் தேடியும் மருந்தகங்களில் முகக்கவசம் கிடைக்கவில்லை. 20 ரூபாய் விற்கக்கூடிய தரமில்லாத முகக்கவசங்களை 40, 50 ரூபாய்க்கு விற்கின்றனர். அதைதான் வாங்கி மாட்டிக் கொண்டோம். மதுரை அரசு மருத்துவமனையில் தனியார் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் கடைப்பிடிக்கும் முகக்கவசம், சேனிடைசர், உள்ளிட்ட முன்னெச்சரிக்கை மருத்துவநடவடிக்கைகள் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. மரண பயத்தில் என் பிள்ளைக்கு சிகிச்சை பார்த்து வெளியே வந்தேன்.
அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உடன்வருபவர்கள் மற்றும் அனைத்து மருத்துவப்பணியாளர்களுக்கும் சேனிட்டைசர், முகக்கவசம் இலவசமாக அளிக்க அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஊரடங்கு உத்தரவுகள் எல்லா இடங்களிலும் கடைபிடித்துவிடலாம். ஆனால் மருத்துவமனைகளில் கடைப்பிடிக்க முடியாது. அனேக வியாதிகளுக்கு ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்கு வந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஆதலால் குறிப்பாக அரசு மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அளித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்த வேண்டும்,’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.