

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் புதுச்சேரி மத்திய சிறையில் இருந்து 4 பெண்கள் உட்பட 79 கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தாக்கத்தைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் இந்தியா முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகள் நிலை குறித்து தாமாக முன் வந்து வழக்கு ஒன்றை விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுக்கு உத்தரவை அனுப்பியுள்ளது.
அந்த உத்தரவில், "இந்தியாவிலுள்ள சிறைகள் அதிகக் கூட்டம் நிறைந்ததாக உள்ளதால், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது முடியாதது. கரோனா அதிக கூட்டம் நிறைந்த பகுதிகளில் பரவும் தன்மை உடையவை. சிறைச்சாலைகள் அதிகக் கூட்டம் நிறைந்தவையாக உள்ளன. குறிப்பாக, குற்றம் சாட்டப்பட்டோர், தண்டனை பெற்றோர், தடுப்புக் காவலில் உள்ளோர் என அதிகம் பேர் வந்து செல்லக்கூடிய இடமாகவும் உள்ளது.
அதுமட்டுமல்லாமல், சிறைவாசிகளைத் திருத்தும் அதிகாரிகள், சிறை அதிகாரிகள், சிறைவாசிகளின் உற்றார், உறவினர்கள், பார்வையாளர்கள், வழக்கறிஞர்கள் என அதிகம் பேர் கூடுவதால் கரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகமுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் ஏற்கெனவே பார்வையாளர்கள், வழக்கறிஞர்கள் சிறைக்கு வரத் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் புதுச்சேரி மாவட்டத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் அனுப்பியது. அதில், சிறு குற்ற வழக்குகளில் சிறையில் உள்ளவர்களை சொந்தப் பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இச்சூழலில், புதுச்சேரி காலாப்பட்டிலுள்ள மத்திய சிறைச்சாலையில் மட்டும் 160 விசாரணைக் கைதிகள், 80 தண்டனைக் கைதிகள், 5 பெண் கைதிகள் இருந்தனர். கரோனா வைரஸ் எதிரொலி காரணமாக கைதிகளை விடுவிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, 4 பெண் விசாரணைக் கைதிகள் உள்பட 79 பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என்று சிறைத்துறையினர் தெரிவித்தனர்.