

ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் 2,700 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நேற்று (மார்ச் 24) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து கோவையில் போலீஸாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் காவல் ஆணையர் சுமித்சரண் தலைமையில் 1,500 போலீஸாரும், மாவட்டத்தில் எஸ்.பி சுஜித்குமார் தலைமையில் 1,200 போலீஸாரும் என, மொத்தம் 2,700 போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையின் முக்கிய இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸார் தணிக்கைப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
அவ்வழியாக வாகனங்களில் செல்வோரைத் தடுத்து நிறுத்தி என்ன காரணத்துக்காகச் செல்கின்றீர்கள் என விசாரித்து, வெளியே செல்லக்கூடாது, வீட்டுக்குச் செல்லுங்கள் என வலியுறுத்தி வருகின்றனர்.
அம்மா உணவகங்கள் திறந்திருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, அங்கு மாநகராட்சி சுகாதாரத் துறையினர் கிருமிநாசினி தெளித்தனர். மாநகரின் பல்வேறு பொது இடங்களிலும் கிருமி நாசினியை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் இயந்திரங்கள் மூலம் தெளித்து வருகின்றனர். கைகளைச் சுத்தமாகக் கழுவுங்கள் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.