

நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையைப் பிரித்து புதிய மாவட்டமாக தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மார்ச் 25) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவித்த தமிழக அரசுக்கு தமாகா சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
குறிப்பாக, மயிலாடுதுறை மக்களின் நீண்ட கால கோரிக்கையான மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், மயிலாடுதுறை தொகுதி மக்கள் மட்டுமல்ல, மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உட்படும் அனைத்துப் பகுதி வாழ் மக்களும் பெரும் பயனடைவார்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்க்கும்போது தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரிக்கும். தமிழக அரசு நிர்வாக வசதிகளுக்காக பெரிய மாவட்டத்தை இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களாகப் பிரித்து செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இப்போது நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையைப் பிரித்து புதிய மாவட்டமாக அறிவித்த தமிழக முதல்வருக்கு தமாகா சார்பில் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.