

கேரள மாநிலத்துக்கு சென்று நாமக்கல் திரும்பிய கூலித் தொழிலாளர்களை காய்ச்சல் பரி சோதனைக்குப் பின்னர் ஊருக்குள் நுழையும்படி கிராம மக்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாரப்பநாயக்கன்பட்டி அத்தியப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 7 பேர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு மண் வெட்டும் வேலைக்கு சென்றுள்ளனர்.
நேற்று அனைவரும் சொந்த கிராமத்திற்கு திரும்பினர். அப்போது கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெளி மாநிலத்தில் இருந்து வந்திருப்பதால் அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் தொற்று உள்ளதா என, பரிசோதித்த பின் இல்லையென்றால் தான் கிராமத்திற்குள் வரவேண்டும் எனக் கூறினர். இதனால் சொந்த கிராமம் திரும்பிய மக்கள் செய்வதறியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மூலம் தகவல் அறிந்த நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் தலைமையிலான அதிகாரிகள் மாரப்பநாயக்கன்பட்டி கிராமத்திற்கு சென்று, குறிப்பிட்ட 7 பேரையும் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டதில், காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதன்பின்னர் அனைவரும் கிராமத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதுகுறித்து நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் கூறுகையில், மாரப்பநாயக்கன்பட்டி ஊராட்சி அத்தியப்பம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 4 ஆண்கள், 3 பெண்கள் உள்பட 7 பேர் கேரள மாநிலத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பினர். அப்போது காய்ச்சல் பரிசோதனைக்குப் பின்னர் கிராமத்திற்கு வர வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து 7 பேருக்கும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அனைவருக்கும் காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதன்பின்னர் அனைவரும் அவர்களது சொந்த கிராமத்திற்கு திரும்பினர், என்றார்.