

கரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீதிமன்றங்களில் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக உயர் நீதிமன்றத்தில் 3வாரங்களுக்கு அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும், நீதிமன்றங்களுக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம், வழக்கறிஞர்களும் அவசர வழக்குகளை மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும், அவர்கள் தங்களது சேம்பர்களை பயன்படுத்த வேண்டாம் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி விதித்துள்ளார். இதேபோல கீழமை நீதிமன்றங்களிலும் முக்கிய வழக்குகளை மட்டுமே விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த இடங்களிலும் கூட்டம் சேரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர வழக்குகள்
சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர். பொங்கியப்பன் தலைமையில் ஒரு அமர்வும், நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் ஆகியோரது தலைமையில் மற்றொரு அமர்வும் ரிட் மற்றும் ரிட் மேல்முறையீட்டு அவசர வழக்குகளையும், குற்றவியல் வழக்குகளையும் விசாரித்தனர். இதேபோல நீதிபதிகள் டி.ராஜா, எம்.துரைசாமி, என்.சேஷசாயி, ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, எம்.நிர்மல்குமார் ஆகியோர் தனித்தனியாக ரிட், ஜாமீன், முன்ஜாமீன் உள்ளிட்ட அவசர வழக்குகளையும் விசாரித்தனர்.
பெரிய அறை
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா, உயர் நீதிமன்றத்தில் கூட்டம் சேருகிறதா என்பது குறித்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும்ஊழியர்கள் கரோனா தற்காப்புநடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தினார். குற்ற வழக்குகளை விசாரித்த சிறிய அறை கொண்ட நீதிமன்றத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பெரிய அறை கொண்ட நீதிமன்றத்துக்கு அந்தவழக்குகளை மாற்ற உத்தரவிட்டார்.
புதிய வழக்குகள்
வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லையெனில் அந்த வழக்குகளை தள்ளுபடி செய்யாமல் விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்க உத்தரவிட்டார். வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இடைவெளி விட்டு அமரவும், புதிய வழக்குகளை தாக்கல் செய்யும் போது சம்பந்தப்பட்ட நீதிபதிகளின் முன்அனுமதி பெற்று வழக்குகளை தாக்கல் செய்யவும், வழக்கு விசாரணையின்போது சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானால் போதும் என்றும் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.