

தமிழகத்தில் 4 இடங்களில் ரூ.300 கோடியில் மின்னணு உற்பத்தி மண்டலங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தில் 25 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் ரூ.10 கோடியே 40 லட்சத்தில் மேம்படுத்தப்படும். நடப்பாண்டில் ரூ.50 கோடியில் 125 வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டப்படும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ளகடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ரூ.3 கோடியே 91 லட்சத்தில் புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
மறைந்த நெல் ஜெயராமனின் நினைவை போற்றும் வகையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ரூ.50 லட்சத்தில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். காய்கறி, பழங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படும் 250 வட்டாரங்களில் ரூ.40 கோடியில் நாற்றங்கால் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். நடப்பாண்டில் தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.25 கோடி ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் 7,500 ஏக்கர் பரப்பளவில் ரூ.33 கோடியில் உயர் தொழில்நுட்ப தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்படும். கும்பகோணத்தில் ரூ.3 கோடியில் வெற்றிலை பயிருக்கான சிறப்பு மையம் உருவாக்கப்படும். காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்யும் முறையை ஊக்கப்படுத்த ரூ.15 கோடி ஒதுக்கப்படும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிதம்பரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் தலா ரூ.3 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண் வணிக மாதிரி அங்காடிகள் அமைக்கப்படும். ரூ.50 கோடியில் 100 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், மின்னணு வர்த்தக தளம் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரூ.25 கோடியில் மேலும் 100 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்படும். காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ரூ.35 கோடியே 11 லட்சத்தில் வேளாண் பொறியியல் சேவைகள் வழங்கப்படும்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 50-வது ஆண்டு நிறைவடைந்த சிறப்பைப் போற்றிடும் வகையில், பழமையான கட்டிடங்களை புதுப்பிக்கவும், நினைவுமண்டபம் கட்டவும், விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் கருத்துக் காட்சிகளும், கருத்தரங்குகளும் நடத்த ரூ.29 கோடியே 86 லட்சம் ஒதுக்கப்படும்.
தமிழகத்தின் 4 இடங்களில் ரூ.300 கோடியில் உலகத் தரம்வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் மின்னணு உற்பத்தி தொகுப்பு மண்டலங்களை தமிழ்நாடு மின்னணு நிறுவனம் அமைக்கும். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ‘எழிலகம்’ வளாகத்தில் ரூ.120 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும். கடந்த ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட சங்கரன்கோவில், குடியாத்தம், பெரும்புதூர், வாணியம்பாடி மற்றும் அரக்கோணம் ஆகிய 5 கோட்டங்களுக்கு ரூ.16 கோடியே 28 லட்சத்தில் கோட்டாட்சியர் அலுவலகங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்படும். திருவெண்ணைநல்லூர், கல்வராயன்மலை, கலவை, கே.வி.குப்பம், குன்றத்தூர், வண்டலூர், சோளிங்கர் ஆகிய 7 வட்டங்களுக்கு ரூ.28 கோடியே 56 லட்சத்தில் வட்டாட்சியர் அலுவலகங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்படும். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட ரூ. 10 கோடி வழங்கப்படும்.
பழுதடைந்த வருவாய்த் துறை கட்டிடங்களுக்கு மாற்றாக ரூ.39 கோடியே 60 லட்சத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படைக்கு ரூ. 10 கோடியில் உலகத் தரம் வாய்ந்த உபகரணங்கள் வாங்கப்படும். பூகோள நிலைக்கலன் கருவி, மின்னணு நில அளவை கருவிகள் மூலம் நில அளவை செய்யும் திட்டம் முதல்கட்டமாக ரூ.40 கோடியே 96 லட்சத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு, 6 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 5 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 17 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் ரூ.48 கோடியே 74 லட்சத்தில் நிலை உயர்த்தப்படும்.
ரூ.10 கோடியில் பழங்குடியின இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர், நில மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சுய உதவிக் குழு பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும். 10 ஆண்டுகளுக்கு மேலான 80 ஆதிதிராவிடர் நல விடுதிகள், 20 பழங்குடியினர் நல விடுதிகள் தலா ரூ.20 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 20 கோடியில் மேம்படுத்தப்படும்.
ஆதிதிராவிடர் குடும்பங்களில் ஏற்படும் இறப்புக்கு ஈமச் சடங்குக்காக வழங்கப்பட்டு வரும் நிதியுதவிரூ.2,500-ல் இருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்படும். ஆதிதிராவிட மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை கொண்டாடும் வகையில் ரூ.14 கோடியே 49 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய 24 சமுதாயக் கூடங்கள் கட்டப்படும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.