

144 தடை உத்தரவு எதிரொலியாக திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் மதுபான கடைகளில் 6 மணி நேரத்தில் 3 மடங்கு விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நேற்று மாலை 6மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் நேற்று மாலை 6 மணிக்கு மூடப்பட்டன.
ஆகவே, நேற்று பகல் 12 மணிமுதல் மாலை 6 மணி வரை, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை களைக்கட்டியது.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 250 டாஸ்மாக் மதுபான கடைகளில், நாள்தோறும் 10 மணி நேரத்தில் ஆகும் மதுவிற்பனையைவிட 3 மடங்கு அதிகமாக விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, "சராசரியாக ஒரு டாஸ்மாக் கடையில் நாள்தோறும் ரூ.1.50 லட்சம் அளவுக்கு மது விற்பனையாகும். ஆனால், நேற்று ரூ.4.50 லட்சம் அளவுக்கு விற்பனையாகி உள்ளது. மது பிரியர்கள் மதுபாட்டில்களை அதிகமாக வாங்கி சேமித்து வைத்துள்ளதுதான் இதற்கு காரணம்" என்று தெரிவித்துள்ளனர்.
காஞ்சியில், டாஸ்மாக் கடைகள்இயங்காது என்பதால், மதுபாட்டில்களை வாங்குவதற்காக ஏராளமானோர் டாஸ்மாக் கடைகளின் முன்பு குவிந்ததால், ரயில்வே சாலை உட்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.