

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நியூசிலாந்தில் இருந்து சென்னை திரும்பிய 65 முதியவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த 55 வயது பெண்ணுக்கும் கரோனா உறுதியாகி உள்ளது. அவர் கீழ்ப்பாக்க அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய 25 வயது இளைஞர் கரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் " எனப் பதிவிட்டுள்ளார்.
தனிமைப்படுத்துதலை மதியுங்கள்..
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம். வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களின் கைகளில் சீல் வைத்தோம், அவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டினோம், வீட்டு வாசலில் ஹோம் கார்ட் பணியமர்த்தியுள்ளோம். ஆனால், அத்தனையும் மீறி வெளியே சென்றுவந்தால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்.
இனியும் இதை அனுமதிக்க இயலாது. இதை ஓர் எச்சரிக்கையாகவே சொல்கிறேன். வெளிநாட்டிலிருந்து நீங்கள் திரும்பியிருந்தால் நீங்கள் வைரஸ் தொற்றை ஏந்துபவராக (கேரியராக) இருப்பதற்கு வாய்ப்பு மிகமிக அதிகம். அதனால், தயவு செய்து வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.
ஊரடங்கை மதிப்போம்..
இந்தியாவில் கரோனா தொற்று பரவல் கடந்த வாரத்தைவிட வேகமெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்துவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கரோனா சமூகப் பரவல் நிலைக்குச் செல்வதைத் தடுக்க சமூக விலகலைத் தவிர வேறு வழியே இல்லை என்பதால் பிரதமர் அறிவுறுத்தலின்படி ஊரடங்கு உத்தரவை மதிப்போம். உயிர் காப்போம்.