Published : 24 Mar 2020 10:26 PM
Last Updated : 24 Mar 2020 10:26 PM

பொதுமக்கள் வெளியில் செல்லும்போது தகுந்த ஆவணங்களுடன் செல்லவும்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னையில் 144 தடையுத்தரவை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் திறந்திருக்கும், பொதுமக்கள் வெளியே செல்லும்போது ஆவணங்களுடன் செல்லவும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்க மாநிலம் முழுதும் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் 5 பேருக்குமேல் கூடக்கூடாது, மீறி கூடினால் போலீஸ் நடவடிக்கை வரும், தமிழக மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்கள் தவிர அனைத்துப்பொருள் போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது, ஒன்றுகூடுவது, நிகழ்ச்சிகள் நடத்துவது, சாலையில் திரிவது அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது, அவசியமான விஷயம் தவிர வெளியில் வருவது கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எவ்வித பீதியும் அடையவேண்டாம், 144 தடையுத்தரவின்போது அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் திறக்கப்பட்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னயில் காவல் ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர் இணைந்து 144 தடையுத்தரவை அமல்படுத்துவது குறித்து ஆலோசனைகூட்டம் நடத்தப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:
கோயம்பேடு காய்கறி, கனி மார்க்கெட்டி மொத்த வியாபாரம் நடைபெறும். வழக்கம்போல் காய்கறி விற்பனை இருக்கும். பொதுமக்கள் சில்லறை காய்கறிகள் வாங்க அங்குச் செல்லக்கூடாது. சில்லறை விற்பனைக்கு அனுமதில் இல்லை. சிறு வியாபாரிகளுக்கு அனுமதி உண்டு. அவர்கள் காய்கறி, கனிகளை வாங்கிச் சென்று அவர்களுக்கான இடத்தில் வைத்து விற்பனை செய்யலாம்.

பொதுமக்கள் சில்லறை விற்பனை நடந்தால் கூடுவார்கள் என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது.மற்றொரு காரணம் அங்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அதற்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவும் அங்கு மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

யார் யார் வெளியே செல்லலாம் என்பது குறித்து சொல்வது என்னவென்றால் அவசியமானவற்றுக்கு வெளியே செல்லுங்கள். வெளியில் செல்லும் பொதுமக்கள் அவர்களது முறையான ஐடிக்கள், டாக்குமெண்டுக்களை வைத்துக்கொள்ள வேண்டும். சாலையோரம் வசிப்பவர்களை, வேறு எங்கும் செல்ல முடியாதவர்களை இங்கு காப்பகங்களில் தங்க வைத்துள்ளோம்.

சிலர் இங்கிருந்து கிளம்பி விட்டார்கள், சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை ஆதரவற்றோர் இடமில்லாதவர்கள் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் மாந்கராட்சி காப்பகங்களில் தங்கலாம் அதற்கான முழு வசதியையும் நாங்கள் செய்துள்ளோம்.

144 உத்தரவுகளை மீறுபவர்களை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 15 மண்டலங்களுக்கு 2 குழு என்கிற வகையில் 30 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையை மீறுபவர்களை கண்காணிப்பார்கள்.

மாநகராட்சி தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறப்பு பணியாளர்களுக்கு சிறப்பு உடை அளிக்கப்பட்டுள்ளது. முழு உடை, தலைக்கவசம், காலில் நீண்ட ஷூ, முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான துப்புரவு பணியாளர்களுக்கு முககவசமும் கையுறையும் தரப்படும். ஐடி நிறுவனங்கள் டெலிகாம், வங்கிப்பணியை அளிக்கும் ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியாற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஐடியில் ஒன்றாக அமர்ந்து வேலை செய்தால் அதன்மூலம் தொற்று பரவினால் நாம் இத்தனை நாள் கஷ்டப்பட்டதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். ஆகவே அதுகுறித்தும் ஆலோசித்துள்ளோம் அதுகுறித்த முடிவை நாளை அறிவிக்க உள்ளோம்”.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x