நெல்லையில் கரோனா பாதிக்கப்பட்டவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் 8 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவரும் 43 வயது மதிக்கத்தக்க நபர் தங்கியிருந்த தனியார் விடுதியில் அவருடன் தொடர்பில் இருந்த 8 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை 28 நாட்களுக்கு கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து திரும்பிய திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க நபருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலுள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவக் குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலுள்ள தங்கும் விடுதியில் 3 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தது, வள்ளியூரில் நடைபெற்ற நிகழச்சி ஒன்றில் பங்கேற்றது, நாங்குநேரி ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தது, சொந்த ஊருக்குச் சென்றது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் சென்ற இடங்கள், தங்கியிருந்த இடங்களில் சுகாதாரத்துறையினர் கரனோ தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அவர் தங்கியிருந்த தங்கும் விடுதியில் முற்றிலுமாக கிருமி நாசனி கொண்டு சுத்தப்படுத்தப்படவேண்டும் என்பதால் அந்த தங்கும் விடுதியையும், அதையொட்டிய ஹோட்டலையும் மூடுவதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அந்த நபருக்கு உதவியாக இருந்த 8 பேரை கண்டறிந்து அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களையும் 28 நாட்களுக்கு கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 8 பேரும் அந்த விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விடுதியும், ஹோட்டலும் 28 நாட்கள் மாநகராட்சி வசம் இருக்கும்.
இதனிடையே திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா சிறப்பு வார்டில் தென்காசி குத்துக்கல்வலசையைச் சேர்ந்தவர் ஒருவரும், தியாகராஜநகரைச் சேர்ந்த ஒரு பெண்ணும், திருச்சியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு கரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
