

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 வடமாநில இளைஞர்கள் கரோனா பாதிப்பு இல்லை என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கயத்தாறு அருகே கடம்பூர் பகுதியில் 2-வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் பணிபுரியும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 15 பேர் விடுமுறையில் ஊருக்கு சென்றுவிட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கடம்பூருக்கு வந்தனர்.
ரயிலில் வரும்போதே, மேற்குவங்க மாநிலம் குதாப்சகாரை சேர்ந்த கணபதி மண்டல் மகன் ஹிராலால் மண்டல் (28), ஜத்ரதங்காவை சேர்ந்த சத்ய பஸாத்தா (28), குதாப்சகாரை சேர்ந்த சுதம் மண்டல் மகன் கிருஷ்ணா மண்டல் (28) ஆகிய 3 பேருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. ஊருக்கு வந்த பின்னர் அவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. மேலும் இருமல், சளி மற்றும் வயிற்றுப்போக்கு இருந்துள்ளது.
இதுகுறித்த தகவல் அறிந்து நேற்று கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் உடனடியாக 3 பேரையும் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அவர்கள் 3 பேரையும் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்து அவர்களைப் பார்வையிட்டார். பின்னர் காய்ச்சல் பாதிப்பில் வரும் நபர்களை தனியாக ஒரு பிரிவில் வைத்து தீவிர கண்காணிப்பில் அனுமதித்து சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், இன்று மாலை திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்தில் இருந்து ஆய்வறிக்கை வழங்கப்பட்டது. இதில், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேருக்கு கரோனா பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் 3 பேரும் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவை கடைபிடித்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசியத் தேவைகளுக்கு வெளியே வரும்போது, முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மீண்டும் வீட்டுக்குள் செல்லும் போது கைகளை நன்றாக கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.