

தமிழக அரசு இன்று முதல் 144 தடை உத்தரவை அமுல்படுத்தியுள்ள நிலையில், மாலை 6 மணி வரை மதுரையில் உள்ள அனைத்து காய்கறி கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மதுரையில் ‘கரேனா’ தொற்று உறுதி செய்த நிலையில் இன்னமும் விழிப்புணர்வு இல்லாமல்மக்கள் கூட்டமாக கூடுவதும், நெருக்கமாக பயணிப்பது சுகாதாரத்துறையினரை அச்சமடைய வைத்துள்ளது.
மதுரையில் நள்ளிரவும் மக்கள் தூங்காமல் விழித்திருந்து உழைப்பார்கள். வாகனப்போக்குவரத்தும் இரவு வேளைகளில் பகல் பொழுதைப்போல் பரபரப்பாக காணப்படும். அதனாலே, தூங்கா நகரம் என்று பெயரெடுத்தது. அதற்காக, உலகையையே அச்சுறுத்தும் ‘கரோனா’ தொற்று நோய் வந்தப்பிறகும், நாங்கள் வழக்கம்போல்தான் ஒய்வில்லாமல் பரபரப்பாக இயங்குவோம் என்றால் என்ன சொல்வது. மக்களின் அறியாமையா? அவர்களுக்கு இந்த நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வு இல்லையா? அல்லது இந்த தொற்றுநோய் நமக்கெல்லாம் வராது என்ற அதீத நம்பிக்கையா? என்பது புரியவில்லை.
சீனாவில் தொடங்கி இத்தாலியில் தற்போது வரை ஆயிரக்கணக்கானோரை உயிரிழக்கச் செய்து இந்த கொடிய வைரஸ் நோய், தற்போது மதுரை அண்ணாநகரில் அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்தவர் இல்லாமல் உள்ளூரிலே வசிப்பவருக்கு வந்துள்ளது சுகாதாரத்துறையினரை ஆச்சரியமடைய வைத்துள்ளது.
இன்றும் 7 பேர் கரோனா அறிகுறிடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே வந்த இந்தநோய் தன்னுடைய அடுத்தக்கட்டமான சமூக பரவல் என்ற நிலையை அடைந்துள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இனி இந்த நோயை கட்டுப்படுத்துவது மக்கள் கைகளிலேயே உள்ளது. அப்படியிருக்கையில் மதுரையில் மக்கள் இன்னும் அந்த பயமும், விழிப்புணர்வும் இல்லாமல் கடைசி நிமிடம் வரை கூட்டமாக நெருக்கமாக பயணித்தனர்.
டீ கடைகள், ஹோட்டல்களில் வழக்கம்போல் மக்கள் கூட்டமாக நின்று டீ, உணவுகள் சாப்பிட்டுச் சென்றனர். ஷேர் ஆட்டோக்களில் மிக நெருக்கமாகவும் பயணம் செய்தனர்.
சூப்பர் மார்க்கெட்கள், காய்கறிக் கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகளிலில் அலைமோதினர். அரசு அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் தடையின்றி செயல்படும் என்று அறிவித்தும் மக்கள் கிடைக்குமா? கிடைக்காதோ? என்ற அச்சத்தில் கடைகளில் பொருட்கள் முட்டிமோதினர்.
வியாபாரிகளும் எந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் வியாபாரம் மட்டுமே குறியாகக் கொண்டு செயல்பட்டனர். மெடிக்கல் ஸ்டோர்களில் மட்டும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து முன்னெச்சரிக்கையாக செயல்பட்டனர்.
மக்கள் கூட்டத்தால் காய்கறிகள், மளிகைப்பொருட்கள் வியாபாரம் மதுரையில் தீபாவளி திருவிழாபோல் களை கட்டியது. மதுரை சென்டரல் மார்க்கெட் ஆரம்பித்தது முதல் இதுவரை இப்படியொரு கூட்டம் ஒதுபோதும் குவிந்தது இல்லையாம். அந்தளவுக்கு மக்கள் காய்கறிகள் வாங்கக் குவிந்தனர். அதனால், காய்கறிகள் விலை 3 மடங்கு அதிகமாக விற்றது.
நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். தற்போது பிரதமரே 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இனியாவது மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டால் மட்டுமே இந்த நோயில் இருந்து தப்பிக்க முடியும்.