

கரோனா பாதிப்பால் புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரரின் வங்கிக் கணக்கில் ரூ. 2 ஆயிரம் வரவு வைக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. இதனால் தினமும் பணி செய்து வாழ்வை நடத்த வேண்டிய ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு அரசு உதவ பல்வேறு தரப்பினரும் கோரியிருந்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையையும் முதல்வர் கேட்டறிந்தார்.
இச்சூழலில் இன்று (மாரச் 24) இரவு செய்தியாளர்களை சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்த முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
"கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பொதுமக்களுக்கு அனைத்துத் தரப்பிலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலுள்ள அனைத்து 3.44 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் நிவாரணம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்காக ரூ.73 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
144 தடை உத்தரவு போட்டாலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் ஊரடங்கு உத்தரவை அமலாக்கியுள்ளோம். தனிமை மட்டுமே மருந்து என்பதால்தான் சீனா கட்டுப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று இன்றும் பால், மளிகை, காய்கறிக் கடைகள் திறந்திருக்கும். மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தால் அத்தியாவசியக் கடைகளும் அதன் பிறகு மூடப்படும். கைவ்கூப்பிக் கேட்கிறோம். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். இரண்டாவது கட்டத்திலிருந்து மூன்றாவது கட்டத்தில் வந்தால் கட்டுப்படுத்துவது கடினம்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.