

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலானது. பொதுமக்கள் 5 பேருக்கு மேல் ஒன்றுகூடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. சென்னை காவல் ஆணையர் 144 தடை உத்தரவு குறித்து ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்க மாநிலம் முழுதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் 5 பேருக்குமேல் கூடக்கூடாது. மீறிக் கூடினால் போலீஸ் நடவடிக்கை வரும். தமிழக மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்கள் தவிர அனைத்துப் பொருள் போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது. ஒன்றுகூடுவது, நிகழ்ச்சிகள் நடத்துவது, சாலையில் திரிவது அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. அவசியமான விஷயம் தவிர வெளியில் வருவது கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எவ்வித பீதியும் அடையவேண்டாம். 144 தடை உத்தரவின்போது அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் திறக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் 144 தடையுத்தரவு குறித்து அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதுகுறித்த விவரம்:
சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகிய நான் கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை ஏற்படுத்த வலியுறுத்தி தொற்றுநோய் சட்டம் மற்றும் ஒழுங்கு முறை 1897 சட்டப்பிரிவு (2)ன் கீழ் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மார்ச் 23 நாளிட்ட அரசாணை எண் 152-ல் அறிவித்துள்ள வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்தும் வகையில் வகையில் பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதைத் தடை செய்தல் அவசியம் எனக் கருதுகிறேன்.
தற்போது அதன் பொருட்டு உள்துறை அரசாணை எண்- 736 நாள் 28/3/1974-ன் படி குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1911 பிரிவு 144 (4)பிரிவு 20 (2) குற்றவியல் நடைமுறைச் சட்டம் மத்திய சட்டப் பிரிவு 2 - 1974-ல் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு பெருநகர சென்னை காவல் ஆணையர் ஆகிய மாவட்ட கூடுதல் நீதிபதி அந்தஸ்தில் உள்ள என்னால், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் இன்று மாலை 6 மணி முதல் கூட தடை செய்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
இந்த ஆணை ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும். 144 குற்ற விசாரணை நடைமுறைச் சட்டத்தின் கீழ் அமல்படுத்தப்பட்டுள்ள மேற்படி தடை ஆணை மேற்கூறப்பட்ட பொது சுகாதாரத் துறை அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும், இவ்வாணையைத் தொடர்ந்து எதிர்வரும் நாட்களில் அறிவிப்புகள் ஏதேனும் வெளியிடப்படும். அவற்றிற்கும் இது பொருந்தும்.
மேற்படி ஆணையை மீறுபவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
மேற்படி ஆணையை அனைவருக்கும் தெரிவுபடுத்த பத்திரிகை, மின்னணு ஊடகங்கள் மற்றும் சென்னை பெருநகர காவல்துறையின் அதிகாரபூர்வ வலைதளங்களில் வெளியிடப்படும். மாவட்ட துணை ஆணையர் அலுவலகம், சரக உதவி ஆணையர்கள் அலுவலகம் மற்றும் அனைத்து காவல் நிலையங்களிலும் ஒட்டப்படும்.
பொதுமக்கள் நலன் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை நிலைநாட்டும் பொருட்டு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2010 மார்ச் 24-ம் தேதி என்னால் கையெழுத்திடப்பட்டு முத்திரை இடப்பட்டது”.
இவ்வாறு காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.