Published : 24 Mar 2020 06:42 PM
Last Updated : 24 Mar 2020 06:42 PM

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது: காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை- செடியில் பறிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட விவசாயிகள்

தமிழகத்தில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டுகளில் ஒன்றான ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டதால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இன்று முதல் காய்களை செடிகளில் இருந்து பறிக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்களில் ஒன்று. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு இங்கிருந்து தினமும் பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் அனுப்பிவைக்கப்படுகிறது. கேரள மாநிலத்திற்கு 20 லாரிகளில் காய்கறிகள் தினமும் சென்றுவந்தது.

மேலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் ஒட்டன்சத்திரம் காய்கறிமார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் வாங்கிச்சென்று வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் உத்தரவை ஏற்று இன்று முதல் மார்ச் 31 ம் தேதி வரை காய்கறி மார்க்கெட்டை மூட மார்க்கெட் சங்க நிர்வாகிகள் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று பகலிலேயே காய்கறி மார்க்கெட்டின் வாயிலை போலீஸார் அடைத்தனர். இதனால் தோட்டங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டுவந்த மினிலாரிகள் மார்க்கெட்டிற்குள் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. உள்ளே இருந்த லாரிகளும் வெளியேற முடியாதநிலை ஏற்பட்டது.

இதனால் மார்க்கெட்டிற்கு வெளியிலேயும், நகருக்கு வெளியிலேயும் காய்கறிகள் இறக்கப்பட்டது. பின்னர் காய்கறிகளை ஏற்றிய லாரிகளை வெளியே அனுப்பினர்.

இன்று முதல் காய்கறி மார்க்கெட் மூடப்படும் என்பதால் விவாசயிகளிடம் மொத்தமாக கொள்முதல் செய்து பிற ஊர்களுக்கு அனுப்ப வழியில்லாததால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து 60 சதவீத காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்பப்பட்டுவருகிறது. இது தடைபடுவதால் கேரளாவில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளது.

பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள்:

ஒட்டன்சத்திரம் மற்றும் இதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் பல்வேறு காய்கறிகளைப் பயிரிட்டுள்ளனர். இவர்கள் விற்பனை செய்ய ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டை நம்பியே உள்ளனர். மார்க்கெட் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்படுவதால் விவசாயிகள் காய்கறிகளை பறிக்காமல் செடியிலேயே விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தக்காளியை செடியில் பறிக்காமல் விட்டால் பழத்தில் வெடிப்பு ஏற்பட்டு பயனற்றதாகிவிடும். இதேபோல் கத்தரிக்காய் உரிய நேரத்தில் பறிக்காவிட்டால் பழுத்து வீணாகிவிடும். முருங்கைக்காய், வெண்டைக்காய் ஆகியவை முற்றிவிடும். இதனால் விவசாயிகள் செடியிலேயே விடமுடியாதநிலையிலும், பறித்துகொண்டுவர முடியாதநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உள்ளூரில் குறைவான காய்கறிகளை மட்டுமே விற்கமுடியும். ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 100 க்கும் மேற்பட்ட கிலோக்கள் காய்கறிகள் அறுவடை செய்வதை மொத்த மார்க்கெட் இல்லாமல் விற்பனை செய்ய

இயலாது என்பதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. காய்களை பறிக்காமல் செடியிலேயே விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x