கூடுதல் மருத்துவ வசதிகளுக்கு போதிய நிதி ஆதாரங்களை ஒதுக்கவும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கூடுதல் மருத்துவ வசதிகளுக்கு போதிய நிதி ஆதாரங்களை ஒதுக்கவும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
Updated on
1 min read

கரோனா தொற்றை எதிர்கொள்ள கூடுதல் மருத்துவமனைகள், பரிசோதனை நிலையங்கள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் ஆகியவற்றை அமைப்பதற்கும், தற்போதுள்ள வசதிகளை விரிவுபடுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும், போதிய நிதி ஆதாரங்களை ஒதுக்கவேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

உலக அளவில் 186 நாடுகளில் கரோனா வைரஸ் நோய் பரவியிருக்கிறது. இது உலகத்தையே மிகப் பெரிய அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இன்று வரை பரிசோதனை செய்யப்பட்டதில், 3 லட்சத்து 32 ஆயிரத்து 970 பேர் கரோனாவால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதனால், 14 ஆயிரத்து 510 பேர் இறந்திருக்கிறார்கள். இத்தாலியில் ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் இறக்கக்கூடிய நிலை உள்ளது.

இந்தியாவில் 443 பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். சமூகத்தில் நோய்த் தொற்று மின்னல் வேகத்தில் பரவுகிறது. எல்லோரையும் பாதிக்கிறது. மிகப் பெரிய அச்சம். வயதானவர்களுக்கு, ஏற்கெனவே நோயுற்றவர்களுக்கு இறப்பு நேரிடுகிறது. வைரஸ் தொற்றை எதிர்நோக்க வேண்டிய அவசியத்தை தமிழக அரசு உணர்ந்த காரணத்தினால் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நோய்த்தொற்றின் வேகம் அதிகரித்தால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அந்தந்த மாநில அரசுகள் மருத்துவமனைகள், மருத்துவ உபகரணங்கள், தனிமைப்படுத்தப்படும் வார்டுகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை எதிர்கொள்ள தேவையான நிதியை அந்தந்த மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் அறிவிப்பு வருமாறு:

“கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக, கூடுதல் மருத்துவமனைகள், பரிசோதனை நிலையங்கள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் ஆகியவற்றை அமைப்பதற்கும், தற்போதுள்ள வசதிகளை விரிவுபடுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும், போதிய நிதி ஆதாரங்களை ஒதுக்குமாறு மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான, உயிர் காக்கும் சுவாசக் கருவிகள், தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள், முகக்கவசங்கள், மருந்துகள் போன்ற அனைத்து வசதிகளுடன் இவை அமைக்கப்பட வேண்டும்”.

இவ்வாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in