

ராமநாதபுரம் மாவட்ட சிறைச்சாலையில் இருந்து 11 கைதிகள் சொந்த இடைக்காலப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டச் சிறையில் 138 விசாரணைக் கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கைதிகளுக்கு கரோனா தொற்று ஏற்படாமலிருக்கும் வகையில் கடந்த 17-ம் தேதி முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வரும் 31-ம் தேதி வரை வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைத்துப் பார்வையாளர்களுக்கும் அனுமதியில்லை என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சண்கமுசுந்தரம் மாவட்ட சிறையில் சோதனை மேற்கொண்டார். சிறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளில் 11 பேரை சொந்த இடைக்காலப் பிணையில் விடுவிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்டவர்கள் நயினார்கோவில், அபிராமம், ராமநாதபுரம் கேணிக்கரை, பஜார், பரமக்குடி, தொண்டி, உச்சிப்புளி ஆகிய காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் என சிறைத்துறையினர் தெரிவித்தனர்.