

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளை வாங்கவும், சாதாரண நோய்களுக்கு சிகிச்சை எடுக்கவும் வெளிநோயாளிகள் தினமும் கட்டுக்கடங்காமல் குவிந்து வருவதால் ‘கரோனா’ தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
‘கரோனா’ வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் இதுவரை 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், மதுரையில் நேற்று தமிழகத்திலேயே முதல் முறையாக உள்ளூரைச் சேர்ந்த 54 வயது நபர் ஒருவருக்கு ‘கரோனா’ வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால், ‘கரோனா’ வைரஸ் நோயின் அடுத்தக்கட்டமான சமூக பரவல் மதுரையில் தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால், மக்களோ எந்த அச்சமும், விழிப்பணர்வும் இல்லாமல் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் வழக்கம்போல் கூடி வருகின்றனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே புறநோயாளிகள் முக்கியமான நோய், உடல் உபாதைகளுக்கு மட்டுமே சிகிச்சைக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சாதாரண உடல் நலக் குறைபாடுகளுக்கும், அறுவை சிகிச்சைகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் தள்ளிப்போடலாம் என்றும் சிறிய நோய்களுக்கு ஆரம்ப சுகாதாரநிலையங்கள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், தாலுகா அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அதுபோல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா, இதய நோய்கள் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதால் மருந்து, மாத்திரைகள் கிடைக்காதோ என்ற பதற்றத்தில் நோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் அரசு மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் தட்டுபாட்டில்லாமல் வழங்கப்படும் என்றும், நாள்பட்ட நோய்களுக்கு ஆங்காங்கே அருகில் உள்ள மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளை வாங்கிக் கொள்ளலாம் என்று நோயாளிகளுக்கு விளக்கப்பட்டது.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல், புறநோயாளிகள் கட்டுக்கடங்காமல் அரசு ராஜாஜி மருத்துவமனையில் குவிந்ததால் மருத்துவர்கள், பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் சிகிச்சை பெறவும், மருந்துகள் பெறவும் முண்டியடித்ததால் மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் ‘கரோனா’ தொற்று அச்சத்துடனேயே பணிபுரிந்தனர்.
வேடிக்கைப்பார்க்கும் ‘டீன்’
‘கரோனா’ வைரஸ் கூட்டம் கூடுவதாலேயே ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுகிறது என்றும், அதனால், கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அரசு மருத்துவமனைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அந்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய ‘டீன்’ சங்குமணி, ‘கரோனா’ வார்டுக்கும், அறிகுறியுடன் சிகிச்சைப்பெறும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதிலுமே மட்டுமே கவனம் செலுத்துவதாக மருத்துவர்கள் குமுறுகின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் நலனில் அவர் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை என்கின்றனர்.
மருத்துவர்களுக்கு மட்டுமே முகக்கவசம் வழங்கப்படுகிறது. செவிலியர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவப்பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கமும் அங்கு நிலவுகிறது.
மருத்துவர் அல்லாதோர், மருந்தகங்களில் விற்கப்படும் தரமில்லாத சாதாரண முகக்கவங்களை வாங்கி பயன்படுத்தும் பரிதாபம் தொடர்கிறது.
"மருத்துவமனை நிர்வாகம், புறநோயாளிகள் அதிகளவில் மருத்துவமனையில் குவிவதைத் தடுக்க, அவர்களை நுழைவு வாயிலிலேயே முறைப்படுத்த வேண்டும்.
தீவிர நோயாளிகள் மட்டுமே மருத்துவமனை வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும். நாள்பட்ட நோய்களுக்கும், மருந்து மாத்திரைகள் வாங்க வருவோரையும் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் ‘கரோனா’ தொற்று பரவும் இந்த நேரத்தில் மக்களுக்காக உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்களுக்கும் ‘கரோனா’ தொற்று நோய் பரவி அவசரக் காலங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அசாதாரணநிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை" என்பதே ராஜாஜி அரசு மருத்துவமனை ஊழியர்களின் கவலையாக இருக்கிறது.