Published : 24 Mar 2020 04:08 PM
Last Updated : 24 Mar 2020 04:08 PM

மதுரையில் கரோனா பாதிக்கப்பட்ட நபர் வசித்த பகுதியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு: 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

மதுரையில் நேற்று தமிழகத்திலே முதல் முறையாக உள்ளூரைs சேர்ந்த ஒருவருக்கு ‘கரோனா’ வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவருக்கு எப்படி இந்த வைரஸ் தொற்றியது என்பதை கண்டறிய முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது. அவருடன் தொடர்பில் இருந்த 80 பேரை சுகாதாரத்துறை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறது.

தமிழகத்தில் ‘கரோனா’ வைரஸ் காய்ச்சலுக்கு 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தி சிறப்பு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இதில், மதுரை அண்ணாநகரை சேர்ந்த 54 வயது ஒருவருக்கு தமிழகத்திலே முதல் முறையாக உள்ளூரை சேர்ந்த நபருக்கு இந்த வைரஸ் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே ‘கரோனா’ வைரஸ் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், வெளிநாட்டில் இருந்த வந்தவர்களுடன் தொடர்பில்லாத மக்கள் அடர்த்தி மிகுந்த மதுரை அண்ணா நகரில் ஒருவருக்கு இந்த தொற்று நோய் கண்டறியப்பட்டது தமிழக சுகாதாரத்துறையை அதிர்ச்சியடை வைத்துள்ளது.

இந்த நிலையில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7 பேர் வரை நேற்று ‘கரோனா’ வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் இன்று அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரத்தமாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தபிறகே இந்த வைரஸ் காயச்சலின் சமூக பரவல் எந்தளவுக்கு வீரியம் அடைந்துள்ளது என்பது தெரிய வரும்.

இதுகுறித்து சுகாதாரத்துறையினரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

‘கரோனா’ தொற்று கண்டறியப்பட்ட அண்ணாநகரை சேர்ந்தவருக்கு ஏற்கணவே சிஓபிடி என்கிற நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர். அதனால், அவருக்கு எளிதாக இந்த வைரஸ் தொற்றியுள்ளது. தற்போது இவரது நிலமை கவலைக்கிடமாக உள்ளது.

ஆய்வில் இந்த நபருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்ததும் அவரது உறவினர்களிடம் வீட்டுமுகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சேகரித்தோம். ஆனால், அவர்கள் ஆரம்பத்தில் தவறான முகவரியைக் கொடுத்துவிட்டனர். எங்களுக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பே கொடுக்கவில்லை. அதன்பிறகு சிரமப்பட்டு வீட்டு முகவரியைக் கண்டுபிடித்து அந்தப் பகுதியை முழு கண்காணிப்பிற்குள் கொண்டு வந்துள்ளோம். தற்போது வரை அவர் எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

அவர் ‘கரோனா’ அறிகுறி சிகிச்சைக்கு வருவதற்கு முன் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று ‘ஸ்கேன்’ எடுத்துள்ளார். மேலும், அவர் அப்பகுதியில் உள்ள அவரது மத தொடர்புடைய வழிபாட்டு தலங்களுக்குச் சென்றுள்ளார். பலர் வீடுகளுக்கும் சென்று வழிபாடுகள் நடத்தியுள்ளார். தாய்லாந்தில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன் வந்த வெளிநாட்டினரை இவர் சந்தித்ததாகவும் கூறுகின்றனர். அந்த குழுவினர் தற்போது மதுரை அருகே சத்திரப்பட்டியில் தங்கியுள்ளனர். அவர்களை சென்றுபார்த்தபோது அவர்கள் ‘கரோனா’ அறிகுறி எதுவும் தென்படவில்லை. ஆனாலும், உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி உள்ளோம். அதுபோல், இவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள், நண்பர்கள், நடமாடிய பகுதியை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 80 பேர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். இவர்கள் உறவினர்கள்

சொன்ன அனைத்து தகவல்களும் சரியானதுதானா? என்பது குறித்து போலீஸார் துணையுடன் சுகாதாரத்துறையினர் விசாரிக்கின்றனர். ஆனால், தற்போது வரை மதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் இந்த வைரஸ் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது பற்றி ஒரு முடிவுக்கு சுகாதாரத்துறையினரால் வர முடியவில்லை. தற்போது கூடுதலாக 7 பேர் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனால், மதுரையில் ஒரளவு இந்த வைரஸ் காய்ச்சல் சமூகத்தில் பரவத்தொடங்கிவிட்டது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. மக்கள் சுய ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் இருந்தால் மட்டுமே இந்த வைரஸ் காய்ச்சலில் இருந்து தப்பிக்க முடியும், ’’ என்றனர்.

80 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்..

இந்நிலையில், மதுரை அண்ணாநகரில் அந்த நபர் வசித்த பகுதியில் சுகாதார அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த நபரின் குடும்பத்தினர், அவர் சென்று சந்தித்த உறவினர்கள், நட்புகள் உள்பட 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x