

அனைத்து கடன்கள் மீதான மாதத் தவணைகளை (இ. எம்.ஐ) கட்டுவதற்கு மூன்று மாத விடுமுறையை அளிக்க வேண்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியுள்ளார் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிச்ட் எம்.பி. சு.வெங்கடேசன்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:
கோவிட் 19 காரணமாக சமூகத்தின் பல பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு தொழில் புரிவோர், சுயதொழில் செய்வோர், வியாபாரிகள், விவசாயிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஏழை எளியோர் ஆகியோர் பெரும் வருமான இழப்பிற்கு ஆளாகிற அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமைப்பு சார் துறைகளை சார்ந்தோர் கூட ஊர் முடக்கம் காரணமாக கூடுதல் செலவினங்களுக்கு ஆளாகிற சூழல் உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும் அச்சுறுத்துகிறது.
எப்போது நிலைமை கட்டுக்குள் வரும் என்ற நிச்சயமற்ற சூழலும் நிலவுகிறது.
இத்தகைய அசாதாரண சூழலில் இவர்கள் அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், அந்நிய வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், கிராமிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி அல்லா நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அமைப்புகளில் பல்வேறு தேவைகளுக்காக - தொழில், வீடு, வியாபாரம்,விவசாயம், கல்வி, நுகர்வு பொருள்- வாங்கியுள்ள கடன் தவணைகளை உரிய காலத்தில் கட்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே அனைத்து கடன்கள் மீதான மாதத் தவணைகளை (இ. எம்.ஐ) கட்டுவதற்கு மூன்று மாத விடுமுறையை அளிக்க ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். இக் கடன்கள் செயல்படா சொத்துக்களாக கருதப்படுவதையும், கடன் தவணை செலுத்த தவறியோராக "சிபில்" அறிக்கையில் இடம் பெறுவதையும் தவிர்க்குமாறு வேண்டுகிறேன். இதற்கான முடிவை விரைவில் எடுத்து அறிவிக்குமாறு வேண்டுகிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நிதிச்சுமையை சமாளிக்க மக்களுக்கு அவகாசம் கொடுக்கும் வகையில் கடன் தவணைகளுக்கு மூன்று மாத விடுமுறை கோருவதாக எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.