

தமிழக சிறையில் கரோனா பரவலைத் தடுக்க 15 ஆயிரம் கைதிகளுக்கு மாஸ்க் வழங்குதல், பரோல் நீட்டிப்பு வழங்குவது, வயதான கைதிகளைத் தனிமைப்படுத்துவது உட்பட பல்வறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சிறை கைதிகள் சீர்த்திருத்த ஆதரவு இயக்க இணை ஒருங்கிணைப்பாளர் பி.தங்கராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் கு.சாமிதுரை மூலம் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவிவருகிறது. தமிழக சிறைகளில் 15 ஆயிரம் கைதிகள் உள்ளனர். அனைத்துச் சிறைகளிலும் நெரிசல் காணப்படுகிறது. சிறையில் கரோனா பரவினால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும். இதனால் சிறையில் கரோனா பரவலைத் தடுக்கவும், கைதிகளின் பாதுகாப்புக்காகவும் சில அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், கைதிகளைத் தனிமைப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்வதையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதையும் குறைக்க வேண்டும். கைது செய்யப்படுவோரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்.
அனைத்து சிறைகளிலும் சிறை அதாலத் நடத்தி கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். வீடியோ கான்பரன்ஸ் வசதியில் சிறை அதாலத் நடத்தலாம். பரோலில் ஏற்கெனவே விடுதலையானவர்களுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கவும், பரோல் கேட்டு மனு அளித்தவர்களின் மனுவை விரைவில் பரிசீலித்து பரோல் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறையில் அடிக்கடி கிருமி நாசினி தெளிக்கவும், சிறை ஊழியர்கள் மற்றும் அனைத்து கைதிகளுக்கும் மாஸ்க் வழங்கவும், புதிய தைிகளை 14 நாள் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும், அனைத்து கைதிகளையும் உடல் நல பரிசோதனைக்கு உட்படுத்த கரோனா அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த தனி வசதி ஏற்படுத்தவும், இதற்குத் தேவையான உபகரணங்களை வாங்கவும், சிறைக்குள் பார்வையாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், வெளியாட்கள் நுழையவும் தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.