

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 12 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 15 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், கை குலுக்கக் கூடாது, கிருமி நாசினிகளை உபயோகிக்க வேண்டும், 15 நாட்கள் சமுதாயத் தனிமையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை இந்திய அளவில் எழுந்துள்ளது.
கரோனா பாதுகாப்பு எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய பல நாடுகள், கரோனாவின் மோசமான மூன்றாவது கட்டமான சமுதாயப் பரவல் கட்டற்றுப் பரவும் நிலைக்கு ஆளாயின. இத்தாலியும், ஈரானும் இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள். இங்கு கொத்து கொத்தாக மரணம் நிகழ்ந்தது. இன்று செய்வதறியாமல் அந்த நாடுகள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றன. இதேபோன்ற நிலை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என மருத்துவர்கள், அரசாங்கங்கள் போராடுகின்றன.
இரண்டாம் நிலையில் இருக்கும் இந்தியா, தனிமைப்படுத்திக்கொள்வதன் மூலம் மூன்றாம் நிலையான சமுதாயப் பரவலைத் தடுக்க முடியும் என்பதால் மக்கள் மார்ச் 31-ம் தேதி வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அனைத்துக் கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.
இன்று மாலை முதல் தமிழகம் முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. கரோனா நோய்த் தொற்று பரவுவதைக் கடுமையாக அரசு கண்காணித்து வரும் நிலையில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட 12 பேரில் 10 பேர் வெளியூரிலிருந்து வந்தவர், ஒருவர் டெல்லியிலிருந்து வந்தவர். மற்றொருவர் மதுரையிலேயே வசிப்பவர். முதன்முறையாக உள்ளூரைச் சேர்ந்த ஒருவருக்கு இந்நோய்த் தொற்று ஏற்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமுதாய நோய்த் தொற்று நிலை என்பது உள்ளூரில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுதல் ஆகும். தமிழகத்தில் இம்முறை பரவக்கூடாது என்பதில் அனைவரும் உறுதியாகப் போராடி வரும் நிலையில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட மூவரில் ஒருவர் வயதான ஆண். இவர் அமெரிக்காவிலிருந்து வந்துள்ளார். மற்ற இருவரும் பெண்கள். அவர்களும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களே.
இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் ட்விட்டர் பதிவு:
“மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவருமே வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள். ஒருவர் 74 வயது முதியவர். இவர் அமெரிக்காவிலிருந்து தமிழகம் வந்துள்ளார். போரூரைச் சேர்ந்த இவர் நோய்த்தொற்று கண்டறியப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றவர் 52 வயதுப் பெண். அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய இவர் புரசைவாக்கத்தில் வசிக்கிறார். அவருக்கு நோய்த்தொற்று உறுதியானதை அடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்றாவது நபர் 25 வயதுப் பெண். ஸ்விட்சர்லாந்திலிருந்து திரும்பிய அவர் கீழ்க்கட்டளையில் வசிக்கிறார். கரோனா தொற்று உறுதியானதை அடுத்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூவரும் நல்ல நிலையில் உள்ளனர்”.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.