

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோவை மத்திய சிறையில் இருந்து 153 கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் இன்று (மார்ச் 24) செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சிறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பெண் கைதிகள் உட்பட136 விசாரணைக் கைதிகள் நேற்று நள்ளிரவு சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும், இன்றைய நிலவரப்படி தற்போது வரை 17 கைதிகள் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல், பரோலில் தண்டனைக் கைதிகள் சிலரை விடுவிக்கவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, இன்று மாலை 6 மணி முதல் வரும் மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வர உள்ளது. இதனால், அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர பொதுப் போக்குவரத்து சேவை இயங்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அத்தியாவசியப் பொருட்களான பால், காய்கறி, மளிகை, இறைச்சி போன்ற பொருட்களின் சேவை தொடர்ந்து இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.