

வரும் 31-ம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து, ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று (மார்ச் 24) மாலை முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குடும்ப அட்டைக்கு நிவாரணமாக ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்குப் போதிய பாதுகாப்பில்லை எனவும், வரும் 31-ம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து, ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, தமிழக சங்கச்சாவடி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் காரல் மார்க்ஸ் கூறுகையில், "பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் எதையும் அறிவிக்காமல் இருப்பது தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநில அரசு அத்தியாவசிய வேலைகள் இயங்கும் என அறிவித்திருக்கும் சூழலில், சுங்கச்சாவடி நிர்வாகத்தின் ஊழியர்களை வேலைக்கு வர கட்டாயப்படுத்தி வருகின்றனர். அதேநேரத்தில், சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ள எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாததுடன், ஊழியர்களுக்குப் பாதுகாப்பு கவசங்களைக் கூட வழங்க மறுத்துள்ளது. இதனால் ஊழியர்கள் பணியில் ஈடுபட அச்சப்படுகின்றனர்.
ஊழியர்களின் உயிரைக் காட்டிலும், பண வசூலை மட்டுமே தங்களது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வைக்கின்றனர்.
எனவே சுங்கச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், மத்திய, மாநில அரசுகள் இவ்விஷயத்தில் தலையிட்டு, சுங்கச்சாவடிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். மார்ச் 31-ம் தேதி வரை சுங்கச்சாவடிகள் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும்" என காரல் மார்க்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.