

கரோனா நிவாரண நிதி வசூலிக்க தனி வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.
அப்போது அவர், கரோனா நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவும் வகையில் பலர் நிதி உதவி வழங்கத் தயாராக உள்ளனர். ஆனால் பல மாவட்ட ஆட்சியர்கள் நிவாரண நிதி பெறுவதற்குத் தயாராக இல்லை என்றார்.
இதற்கு நீதிபதிகள், முதல்வர் நிவாரண நிதி, தலைமை நீதிபதி நிவாரண நிதி போல் நிவாரண நிதி வசூலிக்கு தனிக் கணக்கு இருக்கும் நிலையில் கரோனா பாதிப்புக்கான நிவாரண நிதி வசூலிக்க தனி வங்கிக் கணக்கு தொடங்கலாம்.
அவ்வாறு தனிக் கணக்கு தொடங்கினால் நீதிபதிகள், நீதிமன்றப் பணியாளர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்குவது தொடர்பாக முடிவு செய்யலாம் என்றனர்.