Published : 24 Mar 2020 11:10 AM
Last Updated : 24 Mar 2020 11:10 AM

தெலுங்கு வருடப் பிறப்பு: மக்கள் அச்சத்திலிருந்து மீள வழிவகுக்கும் என நம்புவோம்; வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

தெலுங்கு வருடப் பிறப்பான புத்தாண்டின் முதல் நாளானது கரோனா வைரஸால் மக்கள் தற்போது அடைந்துள்ள அச்சத்திலிருந்து மீள வழிவகுத்துக் கொடுக்கும் என்று நம்புவோம் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மார்ச் 24) வெளியிட்ட அறிக்கையில், "ஆண்டுதோறும் உகாதிப் பண்டிகையான தெலுங்கு வருடப் பிறப்பை மார்ச் 25 ஆம் தேதி மகிழ்ச்சியோடு கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் இந்த வருடம் பொதுமக்கள் நலன் காக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று தமாகா சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

அதாவது, ஒரு ஆண்டின் தொடக்கத்தை குறிக்கும் தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டானது வசந்த காலத்தைக் குறிக்கும், புது முயற்சிகளை மேற்கொள்ளும் நல்ல நாளாக தெலுங்கு வருடப் பிறப்பாக முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நாளில் மக்கள் புத்தாடை அணிந்து, இறைவனை வழிபட்டு, வீடுகளை அலங்கரித்து, அறுசுவை உணவுகளை சமைத்து, உபசரித்து, தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கமானது.

அந்த வகையில் இந்த வருடமும் தெலுங்கு வருடப் பிறப்பை தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுபவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி இன்புற்று வாழ வேண்டும் என்பது தான் தமாகாவின் எதிர்பார்ப்பு.

ஆனால், இப்போதைய கரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணத்தால் இந்த வருடம் உகாதி பண்டிகையைக் கொண்டாட முடியாவிட்டாலும் பொதுமக்களுக்காக இறைவனை வணங்குவீர்கள். அது மட்டுமல்ல கரோனா தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளால் அன்றாடம் வேலைக்குச் சென்று பிழைப்பை நடத்துபவர்களுக்கு பொருளாதாரம் இல்லாத சூழலில் அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.

தெலுங்கு வருடப் புத்தாண்டானது மகிழ்ச்சி, துக்கம் இரண்டையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பார்கள். அந்த வகையில் இந்த வருடம் தெலுங்கு வருடப் பிறப்பான புத்தாண்டின் முதல் நாளானது மக்கள் தற்போது அடைந்துள்ள அச்சத்திலிருந்து மீள வழி வகுத்துக்கொடுக்கும் என்று நம்புவோம்.

எனவே, தெலுங்கு வருடப் பிறப்பில் அடியெடுத்து வைக்கின்ற தெலுங்கு வம்சாவளியினர், கன்னட மொழி பேசுபவர்கள் அனைவரும் நல்வாழ்க்கை வாழ, இந்திய மக்கள் கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்படாமல் இருக்க இறைவனும், இயற்கையும் துணை நிற்க வேண்டுகிறேன்.

மேலும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு தமாகா சார்பில் உகாதி தெலுங்கு வருடப் பிறப்பு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x