Published : 24 Mar 2020 10:55 AM
Last Updated : 24 Mar 2020 10:55 AM

கரோனா: குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி; 9 நிவாரண உதவிகளை அறிவித்த முதல்வர் பழனிசாமி

கரோனா வைரஸால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 நிவாரணம் வழங்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 24) சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரோனா வைரஸ் நிவாரண அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசியதாவது:

"கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க தமிழக அரசு, தொடர்ந்து தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

நேற்று, தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த நான் பல்வேறு அறிவிப்புகளை இந்த அவையில் வெளியிட்டேன். அவற்றுக்கு இணங்க, நேற்று மாலை விரிவான அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன்கீழ், சென்னையில் காவல் ஆணையரும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களும் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க உள்ளார்கள். இவ்வாணைகள் அனைத்தும் இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

இதனால், தினக் கூலிகள், விவசாயக் கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து, அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்து, 3,280 கோடி ரூபாய் மதிப்பிலான பின்வரும் சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க நான் ஆணையிடுகிறேன்.

1. அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும்.

பொது விநியோகக் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க இந்நிவாரணம், டோக்கன் முறையில், ஒதுக்கப்பட்ட நாளிலும், நேரத்திலும் விநியோகிக்கப்படும். இந்த 1,000 ரூபாய் நிவாரணம் மற்றும் விலையில்லாப் பொருட்களை பெற விருப்பம் இல்லாதவர்கள், இதற்கான வலைதளத்தில் மின்னணு முறையில் அல்லது செயலியில் பதிவு செய்துகொள்ளலாம்.

2. குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்கத் தவறியிருப்பின், ஏப்ரல் மாதத்திற்கான பொருட்களுடன் சேர்த்து வாங்கிக்கொள்ளலாம்.

3. கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பாக தலா 1,000 ரூபாயும் மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெயும் வழங்கப்படும்.

4. தற்போது தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொழிலாளர் வாரியங்கள் அடையாளம் கண்டு, அவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்.

5. அம்மா உணவகத்தின் மூலமாக சூடான, சுகாதாரமான உணவு தொடர்ந்து வழங்கப்படும்.

6. எந்த வசதியும் இல்லாதோர், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு, அவர்கள் இருக்கும் இடத்திலேயே, சூடான, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்கப்படும். இதற்கென தேவைக்கு ஏற்ப பொது சமையல் கூடங்கள் அமைக்க, சென்னை மாநகர ஆணையருக்கும், பிற மாவட்ட ஆட்சியர்களுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

7. அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் முதியோர்களுக்கு தேவையான உணவினை அவர்கள் வசிக்கும் இடங்களில் வழங்குவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

8. பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் 1,000 ரூபாயுடன் கூடுதலாக 1,000 ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.

9. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், இந்த மாதத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, 2 நாட்களுக்கான ஊதியம், சிறப்பு ஊதியமாக கூடுதலாக வழங்கப்படும்"

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x