

தட்டுப்பாடு, விலை உயர்வை சமாளிப்பதற்காக திருச்சி, புழல் மற்றும் கோவை சிறைகளில் முகக் கவசம் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு, தனியார் மருத்துவமனைகள், அலுவலகங் கள், தொழிற்சாலைகளில் பணிபுரி வோர் மற்றும் பொதுமக்கள் முகக் கவசம் (மாஸ்க்) அணியத் தொடங்கியுள்ளனர்.
இதனால், இதன் தேவை அதிகரித்துள்ளதைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்ட மூன்றடுக்கு முகக் கவசம் தற்போது பல இடங்களில் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து சிலர் மொத்தமாகக் கொள்முதல் செய்து பதுக்கி வைத்துக் கொள்வதால், பல மருந்துக் கடைகளில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.
இதற்கிடையே வரும் நாட்களில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகமானால் முகக் கவசத்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு, இதன் விலை இன்னும் பல மடங்கு அதிகரிக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதுபோன்ற சூழலில் பொது மக்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்காக புழல், திருச்சி மற்றும் கோவை ஆகிய இடங் களிலுள்ள மத்திய சிறையில் கைதிகள் மூலம் முகக் கவசங்கள் தயாரிக்குமாறு சிறைத் துறை டிஜிபி சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும், முகக் கவசம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் வாங்குவதற்காக ஒவ்வொரு மத்திய சிறைக்கும் தலா ரூ.9 லட்சம் வீதம் ரூ.27 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறியது:
கைதிகளின் மறுவாழ்வுக்காக சிறை வளாகங்களில் ஏற்கெனவே தையலகம் அமைக்கப்பட்டு ஆடைகள், பைகள் போன்றவை தயாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், வெளிச்சந்தையில் தற்போது முகக் கவசத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த நிலையை சமாளிப்பதற்காக கைதிகள் மூலம் முகக் கவசம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, முகக் கவசம் தயாரிப்பில் அனுபவம் உள்ள நபர்கள் மூலம் கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் முகக் கவசம் தயாரிக்கும் பணி தொடங்கியது. இப்பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இங்கு தயாராகும் முகக் கவசங்கள் கைதிகள் நடத்தும் ‘பிரிசன் பஜார்’ மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் விற்பனை தொடங்கும். விலையும், விற்பனை தொடங்கும் தேதியும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மொத்தமாக தேவைப்படுவோருக்கும் முகக் கவசங்கள் தயாரித்துத் தர திட்டமிட்டுள்ளோம் என்றனர்.