

திருச்சியில் மக்கள் ஊரடங்கு நாளில் சாலையில் நின்று டிக்-டாக் பதிவு செய்து கொண்டிருந்ததை அவ்வழியாக வந்தவர்கள் தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.
திருச்சி வயலூர் சாலையிலுள்ள சண்முகா நகர் 13-வது தெருவைச் சேர்ந்தவர் அமீர் பாட்ஷா(48). நேற்று முன்தினம் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டபோது சாலைகள் வெறிச்சோடிக் கிடந்ததால் அமீர் பாட்ஷா தன் மகன் ரிஸ்வான்(20), ரஷீத்(19), வரகனேரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்த ஜமால் மகன் முஸ்தக்(19) ஆகியோருடன் சண்முகா நகர் பிரதான சாலையில் உள்ள ஒரு மளிகை கடை முன் நின்று டிக்-டாக் செயலியில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக ஆட்டோவில் வந்த உய்யக் கொண்டான் திருமலை நாராயணசாமி பிள்ளை ஸ்டோர் பகுதியைச் சேர்ந்த சடையாண்டி மகன் சந்திரசேகர்(28), சண்முகாநகர் 4-வது தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் நாகநாதன்(20), உய்யக்கொண்டான் திருமலையைச் சேர்ந்த வணங்காமுடி மகன் கேசவன்(26), பட்டறை செந்தில் ஆகியோர் அமீர் பாட்ஷா உள்ளிட்டோரைப் பார்த்து சாலையில் நின்று ஏன் டிக்-டாக் வீடியோ எடுக்கிறீர்கள் எனக் கேட்டனர். இதில் இருதரப்பின ருக்கும் ஏற்பட்ட மோதலில் சந்திரசேகர், அமீர் பாட்ஷா, ரிஸ்வான் ஆகிய மூவரும் காயமடைந்தனர்.
இதுகுறித்து சந்திரசேகர் அளித்த புகாரின்பேரில் அமீர் பாட்ஷா, ரிஸ்வான், ரஷீத், முஸ்தக் ஆகியோர் மீதும், அமீர் பாட்ஷா அளித்த புகாரின்பேரில் சந்திரசேகர், நாகநாதன், கேசவன், பட்டறை செந்தில் ஆகியோர் மீதும் புத்தூர் அரசு மருத்துவமனை போலீஸார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் நாகநாதன், கேசவன், ரஷீத், முஸ்தக் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.