

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த (சென்னை போயஸ் கார்டனில் உள்ள) வேதா நிலையம் விரைவில் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற செய்தி, விளம்பரம், எழுதுபொருள், அச்சுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கான பதில் உரையிலும், அறிவிப்புகளிலும் அவர் கூறியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம்இல்லத்தை நினைவு இல்லமாகமாற்றுவதற்கான நடவடிக்கைகளை கடந்த 2017-ம் ஆண்டே தமிழக அரசு தொடங்கியது. அதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.
இதுதொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்ததும் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. விரைவில் முதல்வர் பழனிசாமி நினைவு இல்லத்தை திறந்து வைப்பார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சிலை அமைக்கவும், தூத்துக்குடி குரூஸ் பெர்னாண்டஸ் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடவும் அரசு நடவடிக்கை எடுக்கும்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் மஞ்சக்குப்பத்தில் சுவாமிசகஜானந்தர் (ஜனவரி 27), ராமசாமி படையாச்சியார் ( செப்டம்பர் 16), தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை அழகிரிசாமி (ஜூன் 23), கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் நாராயணசாமி நாயுடு (பிப்ரவரி 6), தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பா.சிவந்தி ஆதித்தனார் (செப்டம்பர் 24) ஆகியோரின் பிறந்த நாள் விழாக்கள் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 50 ஆயிரம் செலவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லம் ரூ. 7 லட்சத்தில் சீரமைக்கப்படும். சென்னை கலைவாணர் அரங்கத்தில் ரூ. 16 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
தலைமைச் செயலகத்தில் உள்ள ஊடக மையம் ரூ. 14 லட்சத்தில் நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் மேம்படுத்தப்படும். மாவட்டத் தலைநகரங்களில் பணிபுரியும் தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்களுக்கு செய்தியாளர் அங்கீகார அட்டை வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.