Published : 24 Mar 2020 09:11 AM
Last Updated : 24 Mar 2020 09:11 AM

இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது: நகரை கண்காணிக்க 32 குழுக்கள் அமைப்பு- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணிக்குமேல் முழுமையாக 144 தடை உத்தரவு அமலுக்கு வருவது குறித்து ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாவட்டத்தில் மார்ச் 24-ம் தேதிமாலை 6 மணிக்குமேல் முழுமை யான 144 தடையுத்தரவு அமலுக்கு வருகிறது. பேருந்து, கார், ஆட்டோ, ஷேர் ஆட்டோ உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்படுகின்றன. அதேபோல் அனைத்து கடைகளும் மூடப்படும். தொழில் நிறுவனங்களை மூடுவதாக அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களே அறிவித்துள்ளனர். அவசர தேவை கருதி சொந்த வாகனங்களில் செல்வோர், சரியான காரணம் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இது தொடர்பாக 32 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் நகரை முழுமையாக கண்காணிப்பர்.

ரேஷன் கடைகளில் புதிய ஏற்பாடு

பால், உணவுக்கு தேவையான பொருட்களுக்கான கடைகள் திறந்திருக்கும். மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும். பெட்ரோல் பங்குகளை மூட நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே உள்ள வார்டுகளைத் தவிர தனி வார்டுகள் உனடியாக ஏற்படுத்தப்படும். ரேஷன் கடைகளில் கூட்டமாக நின்று பொருள்வாங்குவதைத் தடுக்க, பொருட்கள் வாங்க வருவோர் இடை வெளிவிட்டு நிற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தோர், அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் என 77பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். அவர்களின்வீடுகளில் எச்சரிக்கை வில்லைகளை ஒட்டி தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று எச்சரிக்கப்படுவார்கள். தேவைப்பட்டால் பாதுகாவலர் நியமிக்கப்படுவார். மருந்துக் கடைகளும், அரசு அலுவலகங்களும் தொடர்ந்து இயங்கும்.

முன்னதாக கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி, வருவாய் அலு வலர் சுந்தரமூர்த்தி, சார்-ஆட்சியர் சரவணன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ஜீவா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பழநி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x