Published : 24 Mar 2020 09:01 AM
Last Updated : 24 Mar 2020 09:01 AM

கரோனா வைரஸ் குறித்த கேள்விகள், சந்தேகங்களுக்கு வாட்ஸ்அப்பில் நம்பகமான தகவல்களை தெரிந்துகொள்ள வசதி: உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசின் புதிய முயற்சி

க.சக்திவேல்

கரோனா வைரஸ் குறித்த நம்பகமான தகவல்களை வாட்ஸ்அப் மூலம் மக்கள் எளிதாக தெரிந்துகொள்ளும் வசதியை உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத் துறை ஏற்படுத்தியுள்ளன.

கரோனா வைரஸ் பரவத்தொடங்கியது முதலே அதுகுறித்த பல்வேறு வதந்திகளும் சமூக வலைதளங்களில் வலம் வருவதைக் காண முடிகிறது. அந்தத் தகவல்களை உண்மையென நம்பும் சிலர் அவற்றை தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்கின்றனர். இதுபோன்ற தவறான தகவல்களால் மக்களிடையே தேவையில்லாத அச்ச உணர்வு, குழப்பம் ஏற்படுகிறது.

சிலர் பூண்டு சாப்பிட்டால் கரோனா வராது, வெப்பம் அதிகமாக இருந்தால் வைரஸ் இறந்துவிடும், 12-ல் இருந்து 14 மணி நேரம் வரை மட்டுமே வைரஸ் உயிரோடு இருக்கும் போன்ற வாட்ஸ்அப் தகவல்களை பகிர்ந்துவருகின்றனர். பலருக்கும் முழுமையான விழிப்புணர்வு இல்லை. எனவே, நம்பகமான தகவல்களை மக்கள் எளிதாக தெரிந்துகொள்ள மத்திய சுகாதாரத் துறை சார்பில் 91 9013151515 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: Corona Helpdesk என இந்த எண்ணை பொதுமக்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்து கொள்ளலாம். பின்னர், அந்த எண்ணுக்கு Hi என டைப் செய்து மெசேஜ் அனுப்பினால், கரோனா குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள உதவும் மத்திய அரசின் இலவச எண், உதவி மைய எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்கள் வரும். அதோடு, நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் குறித்த கேள்விகளும் ஏ,பி,சி,டி,இ,எஃப் என வரிசையாக இருக்கும்.

கரோனா குறித்த கேள்விகளுக்கு விடையளிக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் வாட்ஸ்அப் வசதி.

அதில், நமக்கு என்ன தகவல் வேண்டுமோ அந்த கேள்விக்குரிய Alphabet-ஐ பதிவிட்டால் உடனடியாக பதில் வரும். உதாரணமாக, ‘ஏ’ என பதிவிட்டால் கரோனா வைரஸூக்கான அறிகுறிகள், எப்போது பரிசோதனை அவசியம் என்ற தகவல்கள் வரும். ‘பி’ என பதிவிட்டால் கரோனா வைரஸ் எப்படியெல்லாம் பரவுகிறது என்ற தகவல் வரும். மருத்துவ உதவி தேவைப்படுவோர் ‘எஃப்’ என பதிவிட்டால் 24 மணி நேரமும் செயல்படும் மத்திய கட்டுப்பாட்டு அறையின் இலவச எண்ணும், அந்தந்த மாநில உதவி மைய எண்ணும் கிடைக்கும்.

மத்திய அரசைப் போலவே உலக சுகாதார நிறுவனமும் 41 225017655 என்ற வாட்ஸ்அப் எண்மூலம் நம்பகமான தகவல்களை தெரிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த எண்ணை செல்போனில் பதிவு செய்து Hi என மெசேஜ் அனுப்பினால், வரிசை எண்கள் வரும். அதில், தற்போது எந்தெந்த நாட்டில் எவ்வளவு பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், நம்மை எப்படி தற்காத்துக் கொள்ளலாம், கரோனா வைரஸ் குறித்த பல்வேறு அடிப்படை சந்தேகங்கள், கேள்விகளுக்கான பதில்கள், பயணிகளுக்கான அறிவுரை ஆகியவை இருக்கும்.

அதில், நமக்கு என்ன தகவல் வேண்டுமோ அந்த தகவல் பெறுவதற்காக எண்ணை Reply அனுப்பினால் உடனுக்குடன் ஆங்கிலத்தில் பதில்வரும். இவ்வாறு அவர்கள் கூறினர். சரியான தகவலை உறுதி செய்யலாம்
கரோனா குறித்தும், மத்திய அரசின் அறிவிப்புகள் குறித்தும் சமூக வலைதளங்களில் உலா வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள பிரத்தியேக வாட்ஸ்அப் எண், ட்விட்டர், முகநூல் பக்கங்கள், மின்னஞ்சல் முகவரியை மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் தொடர்பு அலுவலகம் (பிஐபி) நிர்வகித்து வருகிறது.

எனவே, சந்தேகப்படும் தகவல்களை Screenshot எடுத்து 91 8799711259 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி, மக்கள் சரியான விளக்கம் பெறலாம். மேலும், https://twitter.com/pibfactcheck என்ற ட்விட்டர், www.facebook.com/pibfactcheck/ என்ற முகநூல் பக்கங்களிலும் பதிவு செய்யலாம் அல்லது pibfactcheck@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x