Published : 24 Mar 2020 09:00 AM
Last Updated : 24 Mar 2020 09:00 AM

கோயம்பேடு, பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் வெளியூர் செல்ல ஒரே நேரத்தில் கூடியதால் போதிய பேருந்து வசதி அளிக்க முடியவில்லை: அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விளக்கம்

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை நேற்று குறைக்கப்பட்டது. இதனால் காலையில் இருந்தே பயணிகள் கூட்டம் அதிகரித்து வந்தது. மாலையில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்ததால், பேருந்தில் ஏறுவதற்கு பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.படம்: பு.க.பிரவீன்

சென்னை

வெளியூர் பயணம் செய்ய, கோயம்பேடு, பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் மக்கள் கூடியதால், அனைத்து பயணிகளுக்கும் பேருந்துகள் வசதி அளிக்க முடியவில்லை என்று அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர்.

கரோனா வைரஸ் பரவல் பாதிப்பால் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து நேற்று பல ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று புறப்பட்டு சென்றனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக, மக்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தி வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில்இருந்தே பணியாற்ற அனுமதிக்கப் பட்டுள்ளனர். இருப்பினும், சிறிய, அலுவலகங்கள், சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இதையடுத்து, சென்னையில் வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு நேற்று காலை முதல் புறப்பட்டுச் சென்றனர். காலை 9 மணிக்குப் பிறகு கோயம்பேடு, பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் திடீரென மக்கள் கூட்டம் அதிகரித்தது. ஆனால், பெரும்பாலான அரசு பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்ததால், பயணிகளின் தேவைக்கு ஏற்றவாறு உடனுக்குடன் அரசு பேருந்துகளை இயக்க முடியவில்லை.

இதையடுத்து, மாநகர போக்குவரத்துக் கழகத்தில் புதியதாக தொடங்கப்பட்ட சிவப்பு நிற பேருந்துகள் குறுகிய தூரம் செல்லும் பயணிகளுக்காக உடனடியாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டன. குறிப்பாக, விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்வோருக்கு இந்த வகை பேருந்துகள் இயக்கப்பட்டன.

நீண்ட தூரம் செல்ல வேண்டிய பயணிகள் மணிக்கணக்கில் காத்திருந்து அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்தனர். சென்னைகோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு உள்ளே செல்லும் முன் பயணிகள் அனைவருக்கும் மருத்துவக் குழுவினர் உடல் வெப்பத்தைகண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்து அனுப்பினர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, ‘‘பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சில நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊருக்கு செல்ல உள்ளோம். ஆனால், கோயம்பேட்டில் போதியஅளவில் வெளியூர் பேருந்துகள் இல்லை.

இருப்பினும், வெளியூர்களில் இருந்து விரைவு பேருந்துகள் வந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், காத்துக் கொண்டு இருக்கிறோம். விரைவு பேருந்துகள் வந்தவுடன்நாங்கள் புறப்பட்டுச் செல்லவுள்ளோம்’’ என்றனர்.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை அதிகாலை முதல் அரசுப் பேருந்துகளை கணிசமான அளவுக்கு இயக்கி வருகிறோம். இருப்பினும், ஒரே நேரத்தில் திடீரென மக்கள் கூட்டம் கூடியதால், அனைத்து பயணிகளுக்கும் ஒரே நேரத்தில் பேருந்துகள் வசதி அளிக்க முடியவில்லை. இதையடுத்து தொடர்ந்து குறுகிய தூரத்துக்கு மாநகர பேருந்துகளை இயக்கினோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x