

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக இருக் கிறது என சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி தெரிவித் துள்ளார்.
ஸ்ரீ அகர்வால் சபா மற்றும் எஸ்.சி அகர்வால் தொண்டு அறக்கட்டளை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை அவயங்கள் வழங்கும் விழா சென்னை அண்ணாநகரில் நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் வளர்மதி மொத்தம் 154 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் செயற்கை அவயங்களை வழங்கினார்.
பின்னர், அவர் பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. மற்ற மாநிலங்களின் பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. ஆனால், தமிழக அரசு கடந்த பட்ஜெட்டில் ரூ.364 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, பென்ஷன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் அரசின் திட்டப் பணிகள் மட்டுமே போதாது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக பணிகளை ஆற்றிட முன்வர வேண்டும் என்றார்.
இந்த விழாவில் ஸ்ரீ அகர்வால் சபாவின் தலைவர் இந்திரா ராஜ் பஞ்சல், எஸ்.சி.அகர்வால் தொண்டு அறக்கட்டளை தலைவர் எஸ்.சி.அகர்வால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.