

அமைப்பு சாரா தொழிலாளர்களின் வருமான இழப்பு ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதற்கான இழப்பீட்டை அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்த வழி செய்தால், கொள்ளை கொள்ளும் நோயிடமிருந்து மட்டுமல்ல கடன் தொல்லையிலிருந்தும் அவர்கள் காப்பாற்றப்படுவர் என பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியிருக்கிறார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதனிடையே பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடிதமொன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு, ஒரு பொறுப்புள்ள இந்தியக்குடிமகனாக தங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.
நாம் வாழும் இப்பூமியும், நமது நாடும் ஒரு இக்கட்டான சூழலைத் தற்போது கடந்து வருகின்றோம். கோவிட் 19 என்கின்ற இந்த வைரஸ், மானுடச் சமூகம் இது வரை சந்தித்திராத பேரிடர். இப்பூமிப்பந்தில், ஒரு பரந்த நிலப்பரப்பில் வசிக்கும் ஒரு நாடாகவும், வளர்ச்சியடைந்த ஒரு சமூகமாகவும், இந்த அபாயகரமான சூழலை எதிர்கொண்டு அதை முறியடிக்கும் பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.
இந்நேரத்தில், சுயநலமின்றி, தங்களது சொந்த உடல்நலம் குறித்துக் கூட கவலை கொள்ளாமல் இடையறாது, அயராதும் பணியாற்றும் மருத்துவர்கள் ,சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் எனது பாராட்டைப் பதிவு செய்து கொள்கின்றேன். இக்கடின சூழலில் இந்திய அரசும், மாநில அரசுகளும் துரிதமாகவும், பொறுப்பாகவும் செயல்பட்டு, இந்த வைரஸ் பரவாமல் தடுக்க முடிந்த அளவிற்கான முயற்சிகளை எடுத்துள்ளது பாராட்டத்தக்கது.
இந்தக் கரோனா வைரஸ் பரவும் ஆபத்து, இன்னும் நிலை 2-லியே இருப்பதாகவும் நிலை -3க்கு செல்லும் அபாயத்தை முடிந்த அளவிற்குக் கட்டிற்குள் வைத்துள்ளதாகவும் நிபுணர்கள் சொல்வது வரவேற்கத்தக்க வேண்டிய ஒரு விஷயம். நம் சகோதர சகோதரிகள் ஒவ்வொருவரும் இந்த சூழ்நிலையின் அபாயத்தையும், அதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்கவேண்டிய அவசியத்தையும் உணர்ந்து செயல்படுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நமது நாட்டின் உழைக்கும் மக்களில் 90% மக்கள் அன்றாட வருமானத்தை நம்பி, வாழ்வாதாரத்துக்குப் போராடும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். நிறுவனங்களில் வேலை செய்தாலும் நியாயமான பணியாளர் பலன்கள் கிடைக்காத ஊழியர்களையும் கணக்கில் கொண்டால் அது 95% ஆக உயரும். கட்டிடத் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், சிறு, குறு முதலாளிகளிடம் வேலை பார்க்கும் ஊழியர்கள், நடை பாதை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோர் தனது தினசரி வருமானத்தை நம்பி வாழும் 95% மக்களில் சில பிரிவினர்.
இக்கடிதத்தின் நோக்கமே பரந்து விரிந்து இருக்கும் நம் நாட்டையும், நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டமைக்கும் அந்த தொழிலாளர்களின் உழைப்பு கொண்டாடப்படாமல் போவது போல, அவர்களின் வாழ்வாதார இழப்பும் கண்டுகொள்ளப்படாமல் சென்று விடக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகத் தான்.
பொருளாதார நெருக்கடி சீரமைப்பு குழு (ECONOMIC RESPONSE TASK FORCE) என்று அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய அமைப்பு இவற்றையெல்லாம் மிகக் கவனமாகக் கருத்தில் கொண்டு விரைவாகச் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். வரிச் சலுகை, கடன் தள்ளுபடி, மானியங்கள் போன்றவற்றை மக்களுக்கு அளிக்க வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அது தொழிலதிபர்களுக்கும், அமைப்பு சார்ந்த ஊழியர்களுக்கும் தேவைப்படுகிற உதவி.
அவர்களுக்கு இந்த வசதிகளைச் செய்யும் அதே நேரத்தில் இந்த பணிக்குழு அமைப்பு சாரா தொழிலாளர்களின் வருமான இழப்பு ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதற்கான இழப்பீட்டை அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்த வழி செய்தால், கொள்ளை கொள்ளும் நோயிடமிருந்து மட்டுமல்ல கடன் தொல்லையிலிருந்தும் அவர்கள் காப்பாற்றப்படுவர்.
மனித இனம் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அவர்கள் உயிருக்கு பாதுகாப்பளிக்கும் நோக்கத்தில் செயல்படும் நமது எந்த செயலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் செயலாக அமைந்து விடக்கூடாது.
கோடிக்கணக்கான மக்களின் வாழ்வையும், அன்றாட வருமானத்தை நம்பி உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு நமது அரசிற்கு இருப்பதால் உறுதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்”
இவ்வாறு பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கமல் குறிப்பிட்டுள்ளார்.