Published : 23 Mar 2020 08:18 PM
Last Updated : 23 Mar 2020 08:18 PM

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 3 பேர் காய்ச்சலால் அனுமதி: மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவமனையில் காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் அனுமதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 பேரை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

கயத்தாறு அருகே கடம்பூர் பகுதியில் இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் 15 மேற்கு வங்காளத்தை சேர்ந்த இளைஞர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் கடம்பூர் அருகே கோடங்கால் அரசு மாணவர் விடுதி அருகே டென்ட் அமைத்து தங்கியுள்ளனர்.

இதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 15 பேர் விடுமுறையில் ஊருக்கு சென்றுவிட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கடம்பூருக்கு வந்தனர். ரயிலின் வரும்போதே, மேற்கு வங்க மாநிலம் குதாப்சகாரை சேர்ந்த
கணபதி மண்டல் மகன் ஹிராலால் மண்டல் (28), ஜத்ரதங்காவை சேர்ந்த
சத்ய பஸாத்தா (28),
குதாப்சகாரை சேர்ந்த சுதம் மண்டல் மகன் கிருஷ்ணா மண்டல் (28) ஆகிய 3 பேருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. ஊருக்கு வந்த பின்னர் அவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. மேலும் இருமல், சளி மற்றும் வயிற்றுப்போக்கு இருந்துள்ளது.

இதுகுறித்த தகவல் அறிந்து நேற்று கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் உடனடியாக 3 பேரையும் அழைத்து வந்து பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களை கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர்களுடன் தங்கியிருந்த 12 பேரையும் ஒன்றரை மீட்டர் இடைவெளியில் தங்க வைத்தனர்.

கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 பேரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று மாலை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்து அவர்களை பார்வையிட்டார். பின்னர் காய்ச்சல் பாதிப்பில் வரும் நபர்களை தனியாக ஒரு பிரிவில் வைத்து தீவிர கண்காணிப்பில் அனுமதித்து சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழக அரசின் உத்தரவுப்படி கரோனா வைரஸ் தூத்துக்குடி மாவட்டத்தில் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் அறிவிப்பு படி நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை செயல்படுத்தப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 120 பேரை அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். அவர்களது வீடுகளுக்கு வெளியே சம்பந்தப்பட்ட நபர் எத்தனை நாட்கள் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்பது தொடர்பான ஸ்டிக்கர் ஓட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்து இங்கு கணக்கில் இல்லாதவர்களையும் கண்டுபிடித்து உள்ளோம். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் விவரங்களை சேகரித்து காவல்துறை வருவாய்த்துறை மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று, அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்களுக்கு தான் கரோனா பாதிப்பு உள்ளது. அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று வராமல் பார்த்துக் கொள்வதற்காக தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளவர்களையும் கண்காணிக்க சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவை பொருத்தவரை அத்தியாவசியப் பொருட்களுக்கும், அத்தியாவசிய வேலைகளுக்கும் எந்தவிதமான தடையும் இருக்காது. காய்கறி கடைகள், சிறிய கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு தடை எதுவும் இருக்காது. மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதற்காக 24 மணி நேரமும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் பயந்து ஒரே நேரத்தில் கூடி பொருட்கள் வாங்க செல்வதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 50 படுக்கைகள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்து வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவையான மருந்து வசதிகளும், சுவாசக் கருவிகளும் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட வார்டை காய்ச்சல் காரணமாக அனுமதிக்க படுபவர்களை தனியாக வைத்து சிகிச்சை அளிக்கும் வார்டாக மாற்றியுள்ளோம். ஏற்கெனவே இங்கு 30 படுக்கைகள் உள்ளன. அதனை 70 படுக்கைகளாக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரிய மருத்துவமனையை தேர்ந்தெடுத்து, கரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்கான பட்டியல் நாளை காலைக்குள் வந்துவிடும்.

கோவில்பட்டியில் பொருத்தவரை ரயில்வே பாலம் ஒப்பந்த பணியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 பேருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது ரத்த மாதிரி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து நாளை மாலை சோதனை அறிக்கை வழங்கப்படும். தற்போது 3 பேருக்கும் காய்ச்சல் உள்ளது. ஆனாலும் அவர்கள் சீரான நிலையில் உள்ளனர்.

வெளிநாடு மற்றும் அல்ல வட மாநிலங்களில் இருந்தும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக வந்தவர்களை காவல்துறை, வருவாய்த்துறை ஆகியோர் கொண்ட குழுக்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

முகக் கவசம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி விற்பனை செய்தால் அந்த கடைக்கு சீல் வைக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு தொடரப்படும். இதுபோன்ற பிரச்சினைகள் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்படக்கூடாது என்பதால் மகளிர் குழுக்கள் மூலம் சானிடைசர், முகக் கவசம் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை இன்னும் 2 நாட்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும், என்றார் அவர்.

அப்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அனிதா, கோட்டாச்சியர் விஜயா, மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், வட்டாட்சியர் மணிகண்டன், நகராட்சி ஆணையாளர் ராஜாராம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பரமசிவன், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x