தேனியில் கரோனா முன்னெச்சரிக்கை: தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வருவதைத் தடுக்க கையில் சீல்வைப்பு; வீடுகளில் ஸ்டிக்கர்

தேனியில் கரோனா முன்னெச்சரிக்கை: தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வருவதைத் தடுக்க கையில் சீல்வைப்பு; வீடுகளில் ஸ்டிக்கர்
Updated on
1 min read

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்டவர்களை மற்றவர்ள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் வீடுகளில் ஸ்டிக்கரும், கையில் முத்திரையும் வைக்கப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், நோய் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரோனா பரவியதில் இருந்து இதுவரை தேனி மாவட்டத்திற்கு 104 பேர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். இதில் பலருக்கும் சாதாரண சளி, காய்ச்சல் பிரச்சினை உள்ளதால் அவர்கள் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

இதேபோல் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்குச் சென்று திரும்பியவர்களிலும் சளி பிரச்சினை உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் பலரும் வீட்டிற்கு வெளியே சுதந்திரமாக நடமாடுவதால் அருகில் உள்ளவர்கள் இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆண்டிபட்டி அருகெயுள்ள டி.ரெங்கநாதபுரத்தில் கடந்த இரண்டு நாட்களாக இது குறித்து சர்ச்சை இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவத்துறையினர் சம்பந்தப்பட்டவர்களை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

மேலும் இது போன்று தனிமைப்படுத்துபவர்களின் வீடுகளில் சிறிய அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் அறிக்கை:மாவட்டத்தில் 73பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 28நாட்களுக்கு வீட்டிற்கு வெளியே வரக்கூடாது. இதற்காக வீடுகளில் ஸ்டிக்கரும், கையில் மை முத்திரையும் இடப்பட்டு வருகிறது.

இவர்களின் பட்டியல் வருவாய், காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் திடீர் சோதனை நடத்துவர். அப்போது வெளியில் சென்றிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in