மதுரை மாநகராட்சி அம்மா உணவகங்களில் இரவும் உணவு: கரோனா நெருக்கடியில் எளிய மக்களுக்காக கூடுதலாக சமைத்து விநியோகிக்க உத்தரவு

மதுரை மாநகராட்சி அம்மா உணவகங்களில் இரவும் உணவு: கரோனா நெருக்கடியில் எளிய மக்களுக்காக கூடுதலாக சமைத்து விநியோகிக்க உத்தரவு

Published on

அம்மா உணவகங்களில் இதுவரை காலை, மதியம் மட்டுமே உணவு வழங்கப்பட்டு வந்தநிலையில் தற்போது இரவும் உணவு வழங்க மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கூடுதலாக உணவு சமைத்து தட்டுப்பாடில்லாமல் அனைவருக்கும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எளிய மக்களின் பசியை போக்க தமிழம் முழுவதும் 2013-ம் ஆண்டு முதல் ‘அம்மா உணவகங்கள்’ தொடங்கப்பட்டன. தமிழகத்தில் தற்போது 654 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.

காலை இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் மற்றும் கறிவேப்பிலை சாதம் போன்றவைமலிவு விலையில் வழங்கப்படுகிறது.

அடித்தட்டு மக்கள், இந்த உணவகங்களில் சாப்பிட்டு பசியாறி வருகின்றனர். பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த உணவகங்களில் கடந்த சில மாதமாக போதிய உணவுகள் பற்றாக்குறையாகவே கிடைப்பதாகவும், முந்தியவர்களுக்கு சாப்பாடு கிடைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இந்த உணவகங்களில் இதுவரை காலை, மதியம் மட்டுமே உணவுகள் வழங்கப்பட்டு வந்தன.

தற்போது ‘கரோனா’ வைரஸ் வேகமாகப் பரவுவதால் எளிய மக்கள் வேலைகளுக்க செல்வது தடைப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அம்மா உணவகங்களில் கூடுதல் உணவுகள் சமைத்து வழங்கவும், இரவும் உணவு வழங்கவும் மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், ‘‘144 தடை உத்தரவு இன்று மாலை முதல் அமுலுக்கு வர உள்ளதால் அடித்தட்டு மக்களுக்கு உணவுகள் தட்டுபாடில்லாமல் கிடைக்க அம்மா உணவங்களில் கூடுதல் உணவு தயார் செய்ய சொல்லி உள்ளோம்.

அதற்கான காய்கறிகள், அரிசி, மளிகைப்பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. இரவும் கூடுதலாக ஒரு வேளை தட்டுபாடில்லாமல் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம், ’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in