Published : 23 Mar 2020 04:34 PM
Last Updated : 23 Mar 2020 04:34 PM

கரோனா பாதிப்பால் ஒரு உயிரைக் கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை: முதல்வர் பழனிசாமி பேச்சு

கரோனா நோயின் பாதிப்பால் ஒரு உயிரைக் கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 23) முதல்வர் பழனிசாமி, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசியதாவது:

"தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்துவரும் அதே நேரத்தில், இந்த நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான கூடுதல் வசதிகளை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்திட தேவையான திட்டங்களையும் முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், மாநில அரசு மற்றும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு தமிழக மக்கள் அளித்துள்ள ஏகோபித்த ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக, நேற்று பிரதமரால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட சுய ஊரடங்கு நிகழ்வு தமிழ்நாட்டில் முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. இது தமிழகத்தில் இன்று காலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்தும், மெட்ரோ ரயில் போக்குவரத்தும் 31.3.2020 வரை ரத்து செய்யப்பட்டது. நாட்டின் பல பகுதிகளிலும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் இந்த அரசு திட்டமிட்டு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

முதல்கட்டமாக, அரசு மருத்துவமனைகளில் தற்போது உள்ள 92 ஆயிரத்து 406 உள்நோயாளி படுக்கை வசதிகளில், 9,266 படுக்கைகளை கரோனா வைரஸ் சிகிச்சைக்குத் தேவையான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்தப்படும்.

இதுதவிர, தற்பொழுது கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடங்களில் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக கூடுதலாக படுக்கை வசதிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அவசர சிகிச்சை அதிகம் தேவைப்படாத அரசு மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளிலும், கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு படுக்கை வசதிகளை எற்படுத்தும்போது, தீவிர சிகிச்சை வசதிகளை உருவாக்குவதற்காக, 560 வெண்டிலேட்டர்கள், மானிட்டர்கள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், 500 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளை ஏற்படுத்த தேவையான மருத்துவ கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் போதிய அளவு கொள்முதல் செய்யப்பட்டு இருப்பில் உள்ளன.

தனியார் மருத்துவமனை நிர்வாகங்களோடு கலந்து ஆலோசிக்கப்பட்டு, தமிழகத்திலுள்ள பெரிய தனியார் மருத்துவமனைகளிலும், ஏற்கெனவே இருக்கக்கூடிய படுக்கை வசதிகளில் 750 படுக்கை வசதிகள் கரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனி படுக்கை வசதிகளாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளும் முழு மனதோடு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பை தர முன்வந்துள்ளன.

தவறான தகவல்களை பரப்பும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பொது சுகாதார சட்டம் - 1939 இன் விதி 41, 43, 44 இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், அதற்கான அறிகுறிகள் தென்பட்டு, வேலை செய்யும் இடத்திலோ, விடுதியிலோ, வீட்டிலோ இருந்தால், அவரைப் பற்றிய தகவல்களை அருகாமையில் உள்ள சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அல்லது 24 மணிநேர மாநில கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தகவல்களை உடனுக்குடன் எற்கெனவே அறிவிக்கப்பட்ட தொடர்பு எண்ணிலும் (044-29510500, 29510400 மற்றும் கைபேசி எண்.94443 40496, 87544 48477 மற்றும் இலவச சேவை எண்.1800 120 555550) ஆகிய மையங்களில் உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மேலாளர், விடுதி உரிமையாளர் மற்றும் குடும்பத் தலைவர் ஆகியோரின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக இன்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட உத்தரவுகளை நான் வழங்கியுள்ளேன்:

ஏற்கெனவே வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்தவர்களின் வீட்டுக் கதவில், 'வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்' என்ற விபரம் ஒட்ட வேண்டும்.

இந்த பட்டியலின் விபரம் காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் களத்தில் உள்ள சுகாதாரத் துறை அலுவலர்களுடன் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும். இதனால், தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் பிற மக்கள் தொடர்புகொள்வது தவிர்க்கப்படும்.

தனியாரிடம், கரோனா வைரஸ் நோய் தொற்றை கண்டுபிடிக்கும் பரிசோதனை வசதியையும் பயன்படுத்தி, பரிசோதிக்க வேண்டிய இனங்களை உடனுக்குடன் பரிசோதித்து முடிக்க வேண்டும். · வெளிநாடு பயணித்தோர் மற்றும் அவர்களுன் தொடர்பில் இருந்தோர் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து, சமுதாயத்தின் நலன் கருதி, சுய தனிமைப்படுத்துதல் மூலம், அவர்கள் யாரும் பொது மக்களுடன் தொடர்புகொள்ளாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் மருத்துவ சேவைக்கென, 25% ஒதுக்க வேண்டும்.

சோதனைச் சாவடிகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் அங்காடிகள் போன்ற இடங்களில் தூய்மையைப் பராமரிப்பதை, உள்ளாட்சி அமைப்புகள் முறையாக கண்காணித்து, தூய்மைப்படுத்த வேண்டும்.

காவல் துறை, இத்தகைய கடைகளில் மக்கள் அதிகம் கூடாதவாறு கண்காணிக்க வேண்டும்.

சிறு, குறு மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் 50% ஊழியர்களை வைத்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். எனினும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை தயார் செய்யும் நிறுவனங்களுக்கு இது பொருந்தாது. அவர்கள் வழக்கம்போல் செயல்படலாம்.

கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் தினந்தோறும் மாவட்ட வாரியாக கண்காணிக்கப்படுகின்றன. இது வரை, என் தலைமையில் 6 முறை உயர் அலுவலர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டு, உரிய அறிவுரைகள் வழங்கி, அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

தலைமைச் செயலாளர் தலைமையில் பணிக்குழு அமைக்கப்பட்டு, இந்தக் கூட்டமும் அவ்வப்போது நடத்தப்படுகிறது. இது வரை, மாவட்ட ஆட்சியர்களுடன் 3 முறை தலைமைச் செயலாளர், காணொலிக் காட்சி மூலம் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி போதிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சரும், மாவட்ட ஆட்சியர்களுடனும், சுகாதாரத் துறை அலுவலர்களுடனும், அடிக்கடி காணொலிக் காட்சி மூலம் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அறிவுரைகள் வழங்கி வருகிறார். கள ஆய்வுகள் மேற்கொண்டு, சூழ்நிலை அவ்வப்போது கண்காணிக்கப்படுகிறது.

அதேபோல, உள்ளாட்சித்துறை அமைச்சரும், வருவாய்த்துறை அமைச்சரும், தங்களுடைய துறைகளின் வாயிலாக நாட்டு மக்களுக்கு என்னென்ன தேவையோ அதை எல்லாம் செய்வதற்கும், தடுப்புப் பணிகள் மேற்கொள்வதற்கும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

நான் நேரடியாக தினந்தோறும் ஆய்வு செய்து நிலைமையை கண்காணித்து வருகிறேன்.

மக்கள் இந்த சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து முழு மனதோடும், மன உறுதியோடும் தமிழ்நாடு அரசோடு தோளோடு தோள் நிற்க வேண்டும். அனைவரும், குறிப்பாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள், முழுமையான தகவல்களை சுகாதாரத் துறைக்கு அளித்து முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வேண்டி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 100 ஆண்டுகளில் இவ்வுலகம் சந்தித்திடாத இத்தகைய பெரும் சவாலை நாம் வெற்றி கொள்ள வேண்டிய இத்தருணத்தில், மக்களின் தொடர் ஆதரவும், நடைமுறை ஒழுக்கமும், சுய தனிமைப்படுத்தலும் உடனடி தேவை என்பதை மீண்டும் ஒருமுறை அன்புடன் வலியுறுத்துகிறேன்.

இன்றைக்கு தமிழக அரசு தொடர்ந்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நான் ஏற்கெனவே பத்திரிகைகள் வாயிலாகவும், தொலைகாட்சிகளின் வாயிலாகவும் இதை தெரிவித்திருந்தேன். அதன்படி, இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையிலே, மாநிலத்திலே செயல்படும் அனைத்து அரசு, மாநகராட்சி, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் 31.3.2020 வரை மூட வேண்டும் என்று நான் ஏற்கெனவே உத்தரவு வழங்கி அது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல, மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் மட்டும் தொடர்ந்து இயங்கும். அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் 31.3.2020 வரை மூடப்படும் என்று அறிவுறுத்தப்பட்டு அத்தனையும் இன்றைக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மாநிலத்தில் செயல்படும் அனைத்து திரையங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் 31.3.2020 வரை மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த ஒரு நிகழ்ச்சியும் திருமண மண்டபத்தில் நடத்தக் கூடாது. அவ்வாறு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் கூட குறைந்த அளவில் மக்கள் பங்கேற்க வேண்டும். ஏற்கெனவே திட்டமிடப்பட்டதை தவிர, புதிய நிகழ்ச்சிகள் எதுவும் 31.3.2020 வரை நடைபெறுவதை திருமண மண்டபத்தின் உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவு வழங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல, திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து சமூக நிகழ்வுகளிலும் மக்கள் குறைந்த அளவில் கூடினால் கரோனா வைரஸ் பரவுவது பெரிய அளவில் தடுக்கப்படும் என சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியதன் பேரில், அதனையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொண்டு, அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மக்களும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

அதேபோல, அதிகம் கூட்டம் கூடும் ஊர்வலங்கள், கோடைக்கால பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், வணிக கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகள் நடத்த 31.3.2020 வரை அனுமதி வழங்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்து அதுவும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பார்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவை 31.3.2020 வரை மூடப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டதை தவிர, பிற அவசியம் மற்றும் அத்தியாவசிய பணிகள் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும். கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும், மாநில அரசு வழங்கியுள்ள அறிவுரைகளையும் அனைத்து அரசு துறைகளும், பொது நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும், தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு, இன்றைக்கு தமிழகத்திலே கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் முழு முயற்சிக்யுடன் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன்.

அதோடு, விமான நிலையத்திலே 2 லட்சத்து 5,391 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. வீட்டு கண்காணிப்பிலே 9,424 பேர் இருக்கின்றார்கள். அரசு கண்காணிப்பிலே 198 பேர் இருக்கின்றார்கள். அரசு மருத்துவமனையிலே தனிமைப்படுத்தபட்ட வார்டில் 54 பேர் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அரசு நோய் தடுப்புப் பணிகளிலே முழு மூச்சுடன் ஈடுபட்டு, அனைத்து வகையிலும் மருத்துவர்களை ஈடுபடுத்தி, இந்த நோய் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதுமட்டுமல்லாமல், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் முழுமையாக இதில் ஈடுபடுத்தப்பட்டு, இன்றைக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு இவர்கள் எல்லாம் பணியாற்றி வருகின்றார்கள். அவர்களை இந்த நேரத்திலே அரசின் சார்பாக பாராட்ட கடமைப்பட்டு இருக்கின்றேன்.

அதேபோல, இதற்கு ஒத்துழைப்பாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், ராணுவம், விமான நிலையம், ரயில்வே துறை, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பணியாளர்களும், தங்களை இதில் ஈடுபடுத்திக்கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு அரசுக்கு துணை நின்று, முழு மூச்சோடு இந்த கரோனா வைரஸ் தடுப்புப் பணியிலே ஈடுபடுத்தி கொண்டுள்ளார்கள்.

மேலும், இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு முதற்கட்டமாக 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், அதை கூடுதலாக்கி இப்பொழுது 500 கோடி ரூபாய் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.

எங்களுடைய அரசை பொறுத்தவரைக்கும், எந்த ஒரு மக்களும் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் எங்களது நோக்கம். அந்த நோக்கத்தின் அடிப்படையிலே நாங்கள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றோம். அதற்கு நம்முடைய தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து துறை அலுவலர்களும், உயர் அதிகாரிகளும், இரவு, பகல் பாராமல் அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி நோய் தடுப்புப் பணியிலே தங்களை முழு மனதோடு ஈடுபடுத்திக்கொண்டு, தமிழகத்திலே கரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்கு அரசுக்குத் துணை நிற்கும் அனைவருக்கும் இந்த நேரத்திலே பாராட்டுதல்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு காவல்துறைக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்க்கட்சிகளை பொறுத்தவரைக்கும், இந்த அவையிலே பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்கள். இன்றைக்கு அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது, இன்னும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற விவரத்தை எல்லாம் கேட்டார்கள். அத்தனை விவரங்களையும் நானும் தெரிவித்தேன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும் தெளிவாக விளக்கமாக அத்தனைக்கும் பதில் அளித்தார்.

அரசு எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கையும், நோயை தடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான். நான் குறிப்பிட்ட அத்தனை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. ஏற்கெனவே மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சுகாதாரத் துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கமாக அவையிலே தெரிவித்து இருக்கின்றார்.

ஆனால், இன்றைக்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என்ன காரணத்திற்கு என்று தெரியவில்லை, திடீரென்று இன்றைக்கு அவையை புறக்கணித்து இருக்கின்றார்கள். சட்டப்பேரவை சபாநாயகர் கூட இன்றைக்கு அலுவல் ஆய்வுக் கூட்டம் காலை 10.15 மணிக்கு நடைபெறும் என்று ஏற்கெனவே தெரிவித்தார்கள். அவையிலும் அதைப்பற்றி தெரிவித்தார்.

அதன் அடிப்படையிலே இன்றைக்கு அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் சட்டப்பேரவை சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதிலே பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளை எல்லாம் சட்டப்பேரவை சபாநாயகர் அவர்கள் அறிவிப்பார் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்களுடைய அரசை பொறுத்தவரைக்கும், கரோனா நோயின் பாதிப்பால் ஒரு உயிரைக் கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. முதல்வர் முதல், துணை முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அத்தனை பேரும் அர்ப்பணிப்பு உணர்வோடு இதற்காக பணியாற்றிவோம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து கொள்கிறேன்.

எங்களை பொறுத்தவரைக்கும், தமிழகத்தை பொறுத்தவரைக்கும், இது ஒரு மிகப் பெரிய நோய். இதனை மிகப் பெரிய சவாலாக எடுத்துக்கொண்டு, இந்த நோய் தடுப்புப் பணியில் நாங்கள் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, இந்த நோயை தமிழகத்திலிருந்து முழுமையாக, அறவே ஒழிக்கப்படும் வரை எங்களுடைய பணி தொடரும் என்பதை தெரிவிக்கிறேன்"

இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x