

மதுரை விமானநிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் துபாயில் இருந்து வந்திறங்கியவர்கள், தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு ஒத்ழைக்காமல் அவர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதைப்பார்த்த சமூக வலைதளவாசிகள், அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தாமல் மீ்ண்டும் ‘கரோனா’ வைரஸ் தடுப்பு மையம் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் துபாயில் தமிழகத்தைச் சேர்ந்த 299 பேர், தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை, மத்திய அரசு பாதுகாப்பாக மீட்டு, மதுரை விமானநிலையத்திற்கு கொண்டு வந்தது. அவர்களுக்கு மதுரை சுகாதாரத்துறை துணை இயக்குனர் தலைமையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் பரிசோதனை செய்வதற்கு அருகில் உள்ள ‘கரோனா’ வைரஸ் கண்காணிப்பு மையத்திற்கு பஸ்களில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.
ஆனால், அந்த பஸ்களில் ஏறாமல் அவர்கள் சுகாதாரத்துறை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து அடம்பிடித்தனர். தாங்கள் ஏற்கெனவே துபாயில் பரிசோதனை செய்துவிட்டதாகவும், ‘கரோனா’இல்லை என்றும், தங்களை அடிமைப்போல் நடத்துவதாகவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால், சுகாதாரத்துறை அதிகாரிகள், துபாயில் பரிசோதனை செய்து ‘கரோனா’ இல்லை என்பதற்கான சான்றிதழ் இருந்தால் தரும்படி கேட்டனர்.
அவர்களிடம் அந்த மருத்துவ சான்று இல்லாததால்அவர்களை பஸ்சில் ஏற்றி அருகில் உள்ள ‘கரோனா’ வைரஸ் கண்காணிப்பு மையத்திற்கு அனுப்பிவைக்க முற்பட்டனர்.
அங்கு ஒரு நாள் மட்டுமே தங்க வைத்து, காய்ச்சல், சளி, இருமல், தும்மல் பரிசோதனைகளை மட்டுமே செய்து வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், தற்போது இவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் அலட்சியமாக வீடுகளை விட்டு வெளியே நடமாடுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி துபாயில் இருந்து திரும்பிய 39 வயது இளைஞர் ஒருவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ‘கரோனா’ வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால்சுகாதாரத்துறை அதிர்ச்சியடைந்துள்ளது.
அதனால், துபாயில் இருந்து வந்தவர்களை தற்போது கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை இறங்கியுள்ளது.
துபாயில் இருந்து வந்தவர்கள் முரண்டுபிடிக்கிறார்கள் என்பதற்காக மதுரை வந்த 299 பேரில் 6 பேரை மட்டுமே கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்துவிட்டு மீதி 293 பேரை வீட்டிற்கு அலட்சியமாக அனுப்பியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சூழலில் தற்போது துபாயில் இருந்து கடந்த வாரம் மதுரை விமானநிலையத்தில் வந்து இறங்கியவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்காமல் அவர்களுடன் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது ‘பேஸ்பக்’, ‘வாட்ஸ் அப்’ போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
அதில், அவர்களை வலைதள வாசிகள் திட்டித்தீர்த்து வருவதோடு அவர்களை மீ்ண்டும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும்படி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.